கிம் உயிருடன் இருக்கின்றார்! வடகொரிய மீடியா தகவல்!

02 May 2020 அரசியல்
kimjongunalive.jpg

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உயிருடன் தான் இருக்கின்றார் என, அந்நாட்டு செய்தி ஊடங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

36 வயதான கிம் ஜோங் உன், வடகொரியாவின் தற்போதைய அதிபராக செயல்பட்டு வருகின்றார். அவர் பதவிக்கு வந்தது முதல், அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, வடகொரியா மாறியுள்ளது. தொடர்ந்து, ஏவுகணை சோதனை, ஆயுதங்கள் குவிப்பு என வடகொரியா ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், வடகொரிய அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். இருப்பினும், கிம் தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை செய்து கொண்டே இருந்தார். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் பரவி வருகின்ற இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடைபெற்று வருகின்றது.

இப்படிப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 12ம் தேதி அன்று, இருதய அறுவை சிகிச்சையானது, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு நடைபெற்றது. அதில், அவர் கோமாவிற்கு சென்றுவிட்டதாக, பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவர் இறந்துவிட்டதாகவும், அதனை, வடகொரியா மறைப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில், வடகொரிய அதிபர் நலமுடன் இருப்பதாக, தென்கொரியா கூறியது. மேலும், அதிபர் கிம் ஜோங் உன், வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரில் உள்ள விடுதியில் ஓய்வு எடுத்து வருவதாகவும் அது விளக்கமளித்தது. இதனிடையே, அதிபர் கிம் நலமுடன் இருப்பதாகவும், அவர் அந்நாட்டில் உள்ள உரத் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாகவும் கூறியுள்ளது அந்நாட்டு செய்தி ஊடகம்.

இருப்பினும், அந்த தொழிற்சாலையை தொடங்கி வைத்ததற்கான எவ்வித புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS