ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு த்ரில்லர் படம். ஆமாம், உண்மையானத் திரில்லர் படம். அனைவரும் பாராட்டும் வகையில் உள்ள ஒரு திரைப்படம் தான் இந்தக் கொலைகாரன். படத்தின் ஆரம்பம் முதல், இறுதி வரை தொடர்ந்து திருப்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என இப்படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், படத்தினை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
தன்னுடைய முதல் படமாக இருந்தாலும், தான் என்ன சொல்ல நினைத்தாரோ, அதனை அப்படியே சொல்லியிருப்பதில் தான் அவருடைய வெற்றி அடங்கியுள்ளது. படத்தில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை நான் தான் செய்தேன் என, விஜய் ஆண்டனியின் பிரபாகரன் கதாபாத்திரம். பார்ப்பதற்கு யார்டா இவன் என எரிச்சலாகும் அளவிற்கு மிக இறுக்கமான முகம், வெறுப்பான தோற்றம் என இவருடைய கதாப்பாத்திரத்தை, இவரைப் போலவே உருவாக்கியிருக்கின்றனர்.
வழக்கினை விசாரிக்கும் உயர் போலீஸ் அதிகாரியாக, ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கிறார். இவருக்கு உதவும் காவலராக நாசர் நடித்திருக்கிறார். ஆளாளுக்கு இந்த வழக்கினை விசாரிக்கும் விதமும், உண்மை ஒரு விதமாக இருப்பதும் அருமையான திரைக்கதையை நமக்கு காட்டுகிறது.
உண்மையில் விஜய் ஆண்டனி தான் கொலை செய்தாரா, படத்தின் நாயகிக்கும் அந்தக் கொலைக்கும் என்ன சம்பந்தம்? என படம் முழுக்க நம்மை யோசிக்கவிடாமல், ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர்.
சும்மா சொல்லக் கூடாது கொலைகாரன், மனதினை கொள்ளை அடிக்கும் கொள்ளைக் காரன்.