கோயம்பேடு சந்தையால் பரவி வரும் கொரோனா! 200 பேர் பாதிப்பு!

04 May 2020 அரசியல்
koyembedumarker.jpg

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையின் மூலம், தற்பொழுது 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, வருகின்ற மே-17ம் தேதி வரை, நாடு தழுவிய ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுக்க, 130 மாவட்டங்கள், ரெட் சோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தினைப் பொறுத்தமட்டில், 12 மாவட்டங்கள் ரெட் சோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில் சென்னை பகுதியில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகமாக உள்ளது. அங்கு 1000க்கும் மேற்பட்டோர், கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களாக, அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி விட்டதால், கல்லூரிகளில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், கடந்த வாரம், முழு ஊரடங்கானது சென்னையில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாட்களில், காய்கறி, பழங்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக, பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் திரண்டனர். சுமார், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், அந்தப் பகுதியில் திரண்டதால், சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அதுமட்டுமின்றி, கூட்ட நெரிசலால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முழு ஊரடங்கு காலத்தில், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த ஏழுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே, இங்கு வந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு சென்ற கடலூரினைச் சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதுமட்டுமின்றி, மொத்தமாக இந்த கொரோனா வைரஸ் தொற்றால், கோயம்பேடு மூலம், சுமார் 200 பேருக்கு பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.

HOT NEWS