குவைத் நாட்டில் பணி செய்யும் 8 முதல் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள், தற்பொழுது இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் கடுமையானப் பொருளாதார முடக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல நாடுகள் தங்கள் நாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டு மக்களை, வேலையில் இருந்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல சர்வதேசக் கம்பெனிகள், தற்பொழுது பொருளாதார சிக்கலை சமாளிக்க ஆட்குறைப்பு வேலையில் இறங்கி உள்ளன.
இந்த சூழ்நிலையில், குவைத் அரசாங்கம் தற்பொழுது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையானது, 48 லட்சமாக உள்ளது. அதில், குவைத் நாட்டினைச் சேர்ந்தவர்கள் சுமார் 13 லட்சம் பேர். 34.8 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து, அங்கு வேலை செய்பவர்கள். அங்கு தற்பொழுது கொரோனா பாதிப்புக் காரணமாக, பொருளாதார சீர்த்திருந்தங்களில் அந்நாட்டு அரசு தற்பொழுது முழு மூச்சாக இறங்கி உள்ளது.
அந்நாட்டின் அமைச்சரவையைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவானது, அந்நாட்டு பிரதமரிடம் இது குறித்த அறிக்கை ஒன்றினை சமர்பித்து உள்ளது. அந்த அறிக்கையில், வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்துவதன் மூலம், நம் நாட்டில் உள்ளவர்களின் வேலை வாய்ப்பினை அதிகரிக்க இயலும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. அதற்கு அந்நாட்டின் பிரதமர் ஷேக் சபாத் அல் காலீத் அல் சபா அனுமதி வழங்கி உள்ளார்.
இதனால், அந்நாட்டில் உள்ள 70 சதவிகித ஊழியர்கள் வெறும் 30 சதவிகிதமாக மாற்ற, அந்நாட்டு பிரதமர் அனுமதி வழங்கி உள்ளார். இதனால், அங்கு வேலை செய்கின்ற 14 லட்சம் இந்தியர்களில் 8 முதல் ஒன்பது லட்சம் இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அவசர சட்டமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இது நடைமுறைக்கு வந்ததும், அந்நாட்டில் உள்ள 25 லட்சம் வெளிநாட்டவர்கள், அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனர்.