தலைவர்களின் பார்வையில் அயோத்தி வழக்கு!

09 November 2019 அரசியல்
modi1.jpg

இன்று காலையில், 71 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி வழக்கில் 1045 பக்க அளவில், தன்னுடைய தீர்ப்பினை 45 நிமிடங்களில் கூறியது. அலகாபாத் நீதிமன்றம் கூறிய தீர்ப்பினை தவறு என ரத்து செய்த நீதிமன்றம், அயோத்தியில் இராமர் கோயில் கட்ட தீர்ப்பளித்துள்ளது. மேலும், உத்திரப்பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்திற்கு, மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

அயோத்தியா தீர்ப்பை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த முடிவை யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும் என்பதே, நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் அவர் செய்துள்ள டிவீட்டில், மாண்புமிகு உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இது யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல. ராம் பக்தியோ அல்லது ரஹீம் பக்தியோ, நம் நாட்டினை வலிமைப்படுத்தும் தேச பக்தியே முக்கியம் என டிவீட் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பினை பலரும் வரவேற்று உள்ளார்கள். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீமான், அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்! பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது! என்று டிவிட் செய்துள்ளார்.

இது குறித்து டிவீட் செய்துள்ள ராகுல் காந்தி, அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை மதிக்கும் போது நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும். இது நம் அனைவருக்கும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பின் காலம் என டிவீட் செய்துள்ளார்.

இது குறித்து டிவீட் செய்துள்ள முக ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்ப-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்! என டிவீட் செய்துள்ளார்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன் செய்துள்ள டிவீட்டில், அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்துத் தரப்பினரும் அணுகிட வேண்டும். இந்த நேரத்தில், அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம். என்ற கூறியுள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன், அனைவரும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் - ரஜினிகாந்த் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் மத பேதம் இன்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

HOT NEWS