லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 75 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லிபியா நாட்டில் பொருளாதார முடக்கம், வேலையின்மை, பஞ்சம், பெண் கொடுமை, பாலியல் தொல்லைகள் காரணமாக, அந்நாட்டு மக்கள் அந்த நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர். இதற்காகப் பல ஏஜென்ட்டுகளும் பணம் வாங்கிக் கொண்டு, கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று, சட்ட விரோதமாக குடியுரிமையினை வாங்கித் தருகின்றனர். இவ்வாறு செல்பவர்கள், தங்களுடைய உயிரினையே பணயம் வைக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
இவ்வாறு பயணம் செய்து, இந்த ஆண்டு மட்டும் சுமார் 600க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அந்த வரிசையில் தற்பொழுதும் மாபெரும் துயர சம்பவம் நடைபெற்று உள்ளது. லிபியாவில் இருந்து 120 பேர் சட்டவிரோதமாக கப்பல் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தனர்.
அப்பொழுது அந்தக் கப்பலானது, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இந்த விபத்தால், 75 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 47 பேரினை உயிருடன் மீட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 37 பேரின் உடல்கள் கும்ஸ் கடற்கரையில் ஒதுங்கி உள்ளது. இச்சம்பவம், தற்பொழுது உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.