ஒவ்வ்வொரு வருடமும் இந்த ஏலியன் படங்கள் நூற்றுக் கணக்கில் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், இந்தப் படங்கள் தோல்வியைத் தழுவுவதில்லை. குறைந்தப் பட்ச வருமானத்தையாவது, தந்துவிடும் என்பதனால் தான், இன்னும் இதற்கு மவுசு உள்ளது.
ஹாலிவுட்டில் வரும் பெரும்பாலான, ஏலியன் படங்களின் லாஜிக்குகள் ஒரே மாதிரியானவை. இவர்கள் வேறொரு கிரகத்தினைத் தேடிச் செல்வர். அங்குள்ள ஏலியனிடம் மாட்டிக் கொண்டு ஒவ்வொருவராக இறப்பர். அதிலிருந்து நாயகனோ அல்லது நாயகியோ தப்பித்து மீண்டும் வேறொரு கிரகத்திற்கோ அல்லது பூமிக்கோ செல்வர். இல்லையென்றால், ஏலியன் பூமிக்குள் வரும். அதனை எப்படி, அமெரிக்கா தலைமையில், மனித இனம் சமாளிக்கின்றது. அதனை எப்படி, விரட்டி அடிக்கின்றது என்பதனை மட்டுமே, பல ஆயிரம் ஏலியன் படங்களாக எடுத்து உள்ளனர்.
ஆனாலும், நம் மக்களிடம் அந்த த்ரில் மற்றும் திரைக்கதையின் காரணமாக, இந்தப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர். ஒரு சில படங்களே, கொஞ்சம் வித்தியாசமாகவும் வந்து, பாக்ஸ் ஆபிசிலும் கல்லா கட்டுகின்றன. அந்த வரிசையில், இப்பொழுது நாம் பார்க்க உள்ள திரைப்படம் தான் லைஃப்.
இந்தப் படத்தின் தலைப்பிற்கும், படத்தின் கதைக்கும் மாபெரும் தொடர்பு உண்டு. படத்தின் ஆரம்பமே, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. அந்த விண்வெளி ஆய்வு மையத்தில், செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட, மணல் துகள்களை விஞ்ஞானி ஒருவர் ஆய்வு செய்கின்றார். அப்பொழுது, திடீரென்று, அந்த மணல் துகளுக்கு உயிர் வருகின்றது. அது, அந்த விஞ்ஞானியைக் கொன்று, அவருடைய உடலைப் பயன்படுத்தி வளர்கின்றது. பின்னர், அது ஒவ்வொருவராக கொன்று, தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது.
அதன் உருவமும், நாளுக்கு நாள் வளர்ச்சி அடைகிறது. இந்நிலையில், அங்குள்ள, வசதிகளைப் பயன்படுத்தி அந்த ஏலியனைக் கொள்ள நினைக்கின்றனர். இருப்பினும், அது மிகச் சாதூர்யமாக யோசித்து தப்பிக்கின்றது. அந்த விண்வெளி ஓடத்தில் கடைசியாக இரண்டு பேர் மட்டுமே மிஞ்சுகின்றனர். அவர்களில் ஒருவர், அந்த ஏலியனை கூட்டிக் கொண்டு, விண்வெளிக்குள் சென்று விடுவதாகவும், மற்றொருவர் பூமிக்குத் திரும்ப வேண்டும் எனவும், கணத்த மனதுடன் முடிவு செய்கின்றனர்.
செய்த முடிவின் படி, எல்லாக் காரியங்களையும் செய்கின்றனர். ஆண் வீரர் அந்த ஏலியனை தன்னுடைய பாதுகாப்பு ஓடத்திற்கு வர வழைக்கின்றார். பெண் விண்வெளி வீரர் மிகப் பாதுகாப்பாக, மற்றொரு பாதுகாப்பு விண்வெளி ஓடத்திற்கு செல்கின்றார். அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தாலும், எதிர்ப்பாராத விதமாக நடைபெறும் பிரச்சனையால், ஏலியன் உள்ள விண்கலம் புவிக்குள்ளும், பெண் வீரர் உள்ள விண்கலம் விண்வெளிக்குள்ளும் சென்று விடுகிறது. இதனால், அந்த ஏலியன் புவிக்குள் வந்துவிடுகிறது.
வானில் இருந்து ஓடம் வருவதைப் பார்க்கும் பொதுமக்கள், அதனைத் திறக்க முயற்சி செய்கின்றனர். உள்ளே, இருக்கும் விண்வெளி வீரரோ வேண்டாம் என்கிறார். காரணம், இதனைத் திறந்தால் வெளியில் வந்து, மக்களின் உயிரை எடுத்து, வளர ஆரம்பித்துவிடும். இத்துடன் படத்தை முடித்து, அடுத்தப் பாகத்திற்கு அடிபோட்டுள்ளனர்.
படத்தின் கதை மட்டுமல்ல, திரைக்கதையும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. இப்படத்தின் மிகப் பெரிய பலமாக, கருதப்படுவது ஒன்றிரண்டல்ல. பல விஷயங்களை இப்படத்தின் பலமாகக் கூறலாம். செவ்வாய்க்கு சென்றதைக் காட்டாமல் இருந்தது, எதிர்ப்பாராத திருப்பங்கள், கச்சிதமான கதாப்பாத்திரங்கள் என இப்படம் அனைவராலும் ரசிக்கும் படி, உருவாக்கப்பட்டுள்ளது.
என்ன இன்னும் யோசனை, இப்படத்தினைப் பார்க்க வேண்டியது தானே?