முதல் கட்டமாக நடைபெற்றத் தேர்தலில் 76.19% வாக்குகள் பதிவு!

28 December 2019 அரசியல்
votingmachine.jpg

தமிழகம் முழுவதும், நேற்று முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த, உள்ளாட்சித் தேர்தலானது, தற்பொழுது நடத்த ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் பட்டியலுக்கானத் தேர்தல் நடைபெற்றது.

நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து, வாக்களித்து வந்தனர். பலரும் தங்களுடைய வாக்குகளை வரிசையில் நின்று அளித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் செங்கோட்டையன் உட்பட பலரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். காலையில் ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவானது, மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப் பதிவின் பொழுது தாமதம் மற்றும் தடங்கல்கள் ஏற்பட்ட இடங்களில் மட்டும், சிறிது நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 76.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் நான்கு வாக்குகளை முறையே, தனித்தனியாக வாக்காளர்கள் அளித்தனர். சேலத்தில் 81.68% வாக்குகளும், கடலூரில் 79.68% வாக்குகளும், திருச்சியில் 76.18% வாக்குகளும், திருவண்ணாமலையில் 71.02% வாக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 64.34% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது.

HOT NEWS