இந்தியா முழுவதும், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, இந்த கொரோனா வைரஸானது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருவதால், இதனைத் தடுக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதன் பரவலைத் தடுக்கும் பொருட்டு, ஊரடங்கினை நீட்டிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் இன்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதன்படி, வருகின்ற மே ஒன்றாம் தேதி வரை, பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது என, பஞ்சாப் மாநில முதல்வர், அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் ஏற்பாடு செய்யபட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இதே போல், ஒடிசாவில் ஏப்ரல் 30ம் வரை, ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவினை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அங்கும் ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் சற்று வருத்தம் அடைந்து உள்ளனர்.
இருப்பினும், இது பொதுமக்களுக்காகவே எடுக்கப்பட்ட முடிவு என அரசியல் விமர்சகள் கருதுகின்றனர். தமிழகத்தினைப் பொருத்தமட்டில், ஏப்ரல் 30ம் தேதி வரை, இந்த ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை மருத்துவத் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கினை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில், இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கினை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் சுகாதாரத்துறை ஊழியர்கள்.
இதனால், வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வாய்ப்புகள் உள்ளன. ஏப்ரல் 11ம் தேதி அன்று, இது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, ஊரடங்கு நீட்டிப்புக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.