சோமாலியாவில் வெட்டுக்கிளிகள் படை! விவசாயிகள் கண்ணீர்! ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நாசம்!

04 February 2020 அரசியல்
gujaratlocust.jpg

சோமாலியா நாட்டில் தற்பொழுது வெட்டுக் கிளிகளால், பல லட்சம் ஹெக்டேர் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. காப்பான் படத்தில், வெட்டுக்கிளிகளை திறந்துவிடும் கார்ப்பரேட் வில்லன், விவசாய நிலங்களை அழிப்பான். அதே போல் தான், தற்பொழுது சோமாலியாவிலும் நடைபெற்று வருகின்றது.

இந்தப் பிரச்சனைக் காரணமாக, தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது சோமாலியா அரசு. அந்த நாட்டில், இது போன்ற நிகழ்வுகள் சகஜம் என்றாலும், இந்த முறை நடத்தப்பட்டுள்ள வெட்டுக்கிளிகள் தாக்குதலானது, மிகப் பெரிய பொருள் சேதத்தினை உருவாக்கி உள்ளது. இந்த வெட்டுக்கிளிகளின் படையால், தற்பொழுது வரை, 1,75,000 ஹெக்டேர் விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனை வேகமாகக் கட்டுப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும், தற்பொழுது அந்நாட்டு அரசாங்கம் செய்து வருகின்றது.

இருப்பினும், இந்த வெட்டுக் கிளிகளை அடக்க இயலாமல் திணறி வருகின்றது. தற்பொழுது அந்த நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலையானது, வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக இருப்பதால், வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை அவ்வாறு நடைபெற்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பெரிய நஷ்டம் உருவாகும். மேலும், வருகின்ற ஏப்ரல் மாதம், சோமாலியாவில் அறுவைடக் காலம் ஆகும். அதற்குள் இந்த வெட்டுக் கிளிப் படையினை, முழுமையாக அழிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இருப்பினும், அதற்குள் இவை, சோமாலியாவின் விவசாய உற்பத்தியினை அழித்துவிடும் என்றால், ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதே போன்ற, தாக்குதலினை கடந்த சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் குஜராத் மாநிலம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலானது, தற்பொழுது பாகிஸ்தானின் சிந்து பகுதியிலும் நடைபெற்று வருகின்றது. இதனை, முக்கியப் பிரச்சனையாகக் கருதி, சர்வதேச வேளாண் தீர்ப்பாயம், பாகிஸ்தானிற்கு உதவ முன்வந்துள்ளது.

HOT NEWS