கண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள்! இங்கிலாந்தில் பயங்கரம்!

24 October 2019 அரசியல்
lorrycontainer.jpg

இங்கிலாந்து நாட்டின் சாலையில் சென்ற கண்டெய்னர் லாரியில், 39 சடலங்கள் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது தற்பொழுது, இங்கிலாந்தினை கதி கலங்க வைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் பகுதியில், போலீஸ் சோதனையின் பொழுது, ஒரு கண்டெய்னர் லாரி பிடிபட்டது. போலீசார் அந்த வாகனத்தில் சோதனை செய்து பார்க்கும் பொழுது, அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

அந்த கண்டெய்னர் லாரியில், சுமார் 39 மனித சடலங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து, அந்த லாரியினை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும், அந்த இடத்திற்கு, மருத்துவக் குழுவானது வரவழைக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. அந்த லாரியில், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய, குளிர் சாதன வசதி இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு வேளை 39 பேரையும் பிடித்து, அந்த லாரிக்குள் அடைத்தாலும், அதிலுள்ள குளிர்சாதன வசதியின் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக இறந்துவிடுவர். அப்படியொரு மோசமான வசதி அதில் உள்ளது. மேலும், இந்த வாகனம் தொடர்ந்து, நான்கு நாட்களாகப் பயணம் செய்து இங்கு வந்துள்ளது.

இந்த வழக்கினை விசாரிக்கும் பிரிட்டன் போலீசார் விசாரணையில், இந்த வாகனம் ஐயர்லாந்து வழியாக இங்கு வந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த லாரியானது பல்கேரியாவில் உள்ள ஒரு பெண்ணின் பெயரில், பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த லாரியினை 25 வயதுடைய இளைஞர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். போலீசார், அந்த 39 பேரையும் உயிருடன் அந்த வாகனத்தில் அடைத்து வைத்திருந்திருக்கலாம் எனவும், அவர்களை துடிக்கத் துடிக்க குளிரூட்டிக் கொன்றிருக்கலாம் எனவும் யூகித்து வருகின்றனர்.

இது குறித்து பேசியுள்ள, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இது மிகவும் துயரமான நிகழ்வு ஆகும். அந்த 39 பேரின் அடையாளங்களைக் கண்டுபிடித்து, விசாரணை முடிந்தவுடன் அவர்களுடை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். இது தற்பொழுது, உலக அளவில் பேசு பொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS