இனி உங்கள் போன் தொலைந்து போய் விட்டால், கவலைப் பட வேண்டாம். அதனைக் கண்டுபிடிக்க புதிய வசதியினை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
நம்முடைய மக்கள் தற்பொழுது உணவில்லாமல் கூட இருப்பார்கள். ஆனால், கையில் மொபைல் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அப்படி உள்ள மொபைல்களைத் திருடுவதற்கு என்றே, ஒரு கூட்டமே சுற்றி வருகின்றது. இதற்குக் காரணம், அதன் விலை. ஆம், பெரும்பாலான மொபைல் போன்கள், குறைந்தது 10,000 ரூபாய்க்கு மேல் கொடுத்தே நாம் வாங்குகின்றோம்.
இதனால் அதனை திருடி விற்றால், மார்க்கெட் குறைந்தது 2,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை சம்பாதிக்க இயலும். இதன் காரணமாக, இதனை எளிதாக திருடியும் விடுகின்றனர். அவர்கள் திருடவில்லை என்றாலும், நாம் மறதியில் எங்காவது தொலைத்து விடுகின்றோம். இந்தப் பிரச்சனைக்கு முற்றிப் புள்ளி வைக்கும் விதத்தில், புதிய வசதியினை நம் இந்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
சிஈஐஆர்(CENTRAL EQUIPMENT IDENTIY REGISTER) என்ற திட்டத்தினை புதியதாக சோதனை முயற்சியில் உருவாக்கியுள்ளது. அதன்படி, நீங்கள் உங்கள் மொபைலினைத் தொலைத்துவிட்டால், முதலில் போலீஸில் புகார் அளிக்க வேண்டும். பின்னர், அந்த புகாருடன் 14422 என்ற எண்ணினைத் தொடர்பு கொண்டால், அவர்கள் உங்கள் மொபைல் பற்றியத் தகவல்களைத் துல்லியமாகத் தந்துவிடுவர். நீங்கள், உங்கள் மொபைல் இருக்கும் இடத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இது மொபைல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தும், பயனர்களின் வசதிக்காக, உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். பொதுவாக, அனைத்து மொபைல்களுக்கும், ஐஎம்ஈஐ (IMEI) என்ற எண் வழங்கப்பட்டு இருக்கும். அதனை சமூக விரோதிகள் மற்றும், பெரிய ஹேக்கர்களால் மாற்றப்பட்டு, போலியான ஐஎம்ஈஐ நம்பர் உருவாக்கப்பட்டு பயன்படுத்துப்படுகின்றன.
ஆனால், அனைத்துப் போன்களின் ஐஎம்ஈஐ நம்பர்களும், இந்தியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருக்கும். அப்படி இருக்கும் ஐஎம்ஈஐ நம்பர்களில், ஒரு சில போன்களுக்கு போலியான மற்றும் ஒரே மாதிரியான ஐஎம்ஈஐ நம்பர்கள், பல போன்களுக்குத் தந்து ஹேக்கர்கள் உட்பட, பல சமூக விரோதிகள் பயன்படுத்துகின்றனர்.
இந்த செயலை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிஈஐஆர் திட்டத்தின் மூலம் தடுக்க இயலும். எவ்வளவு முறை ஐஎம்ஈஐ நம்பர்களை மாற்றினாலும், உண்மையான ஐஎம்ஈஐ கண்டுபிடித்து, அந்தப் போன்களை தடை செய்ய இயலும்.
தொலைந்த, திருடப்பட்ட போன்களின் தொலைத்தொடர்பு வசதியினை நிறுத்துவது மற்றும், அது எங்கு தொலைந்தது உள்ளிட்ட விஷயங்களுக்காகவும், இது உருவாக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சோதனை முறையில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில், இதனை இந்தியா முழுவதும் நாம் பயன்படுத்தும் வகையில், வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.