பத்து ரூபாய்க்கு உணவு வழங்கிய ராமு மரணம்! மதுரையில் சோகம்!

13 July 2020 அரசியல்
madurairamuthatha.jpg

மதுரையில் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கிய, ராமு தாத்தா காலமானார்.

மதுரையில் பல ஆண்டுகளாக பத்து ரூபாய்க்கு உணவு வழங்கியவர் ராமு. திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தில் வசித்து வந்தார் ராமு. இவருடைய மனைவி பூரணத்தம்மாளுடன் இணைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள அண்ணா பேருந்து நிலையத்தினை ஒட்டி, ஒரு சிறிய ஓட்டுக் கடையில் தன்னுடைய உணவு விடுதியினை நடத்தி வந்தார்.

மதுரையில் ஒரு வேளை உணவு உண்ண, குறைந்தது 50 ரூபாயாவது தேவைப்படும். ஆனால், தன்னால் முடிந்த உதவியினை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற உயர் நோக்கத்துடன், வெறும் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி வந்தார் ராமு தாத்தா. இவருடைய கடையானது, மதுரைக்கு முழுக்கப் புகழ் பெற்றது. இவர் தன்னுடையக் கடையினை 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நடத்தி வந்தார்.

அவருக்காகப் பலரும், தங்களால் முடிந்தப் பண உதவி உள்ளிட்டவைகளைச் செய்து வந்தனர். இவர் முதலில் கால் அணாவுக்கு உணவு வழங்கி வந்தார். விலைவாசி உயர்வால், 1 ரூபாய், 2 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் மற்றும் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கினார். அரசு மருத்துவமனைக்கு வரும் பல ஏழை, எளிய மக்கள் அவர் கடையில் வந்து, வயிறாற உணவு உண்டு செல்வர். உணவு உண்பவர்களிடம், உணவு எப்படி உள்ளது என்று மகிழ்வுடன் கேட்பார்.

இவர் கடையில் மொத்தம் பத்து முதல் 12 இருக்கைகள் மட்டுமே இருக்கும். ஆனால், அந்தக் கடையில் உணவு உண்ண கூட்டம், வரிசையில் நிற்கும். காலையில் இரண்டு சட்னியுடன் இட்லி, தோசை, பொங்கல், வடை, மதியம் இரண்டு கூட்டு அல்லது பொறியல், ரசம், சாம்பார், சாதம், மோர் என உணவு வழங்கி வந்தார்.

சமீப காலமாக, உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ராமு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இயற்கை எய்தினார். 91 வயதான ராமு, கடைசி வரையிலும் தன்னுடைய சொந்தக் காலில் நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS