இனி மேல் இப்படி நடக்காமல் இருக்க டிஜிபி உத்தரவிடலாம்! நீதிமன்றம் ஆலோசனை!

24 June 2020 அரசியல்
sathankulamlockup.jpg

சாத்தான் குளத்தில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்த, பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் என்பவர்கள், கிளை சிறையில் மர்மமாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், ஊரடங்கின் பொழுது இவர்கள் கடை திறந்திருந்ததை அப்பகுதி போலீசார் கண்டித்தனர். இதனிடையே, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் உண்டானது. போலீசாரை, தங்கள் வேலையைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக அவர்களை கைது செய்து, சப் ஜெயிலில் அடைத்தனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் பென்னிக்ஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். அதே போல், நேற்று அவருடைய தந்தை ஜெயராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால், அந்த காவல்நிலையத்தில் இருந்தவர்கள் தான், இவர்களை அடித்தேக் கொன்று விட்டனர் என்று பொதுமக்களும், அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பதை தாமாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. காணொளி மூலம், இந்த விசாரணை நடைபெற்றது. அதில், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, டிஜிபி உத்தரவிடலாமே என, நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும், இரு உடல்களின் பிரேதப் பரிசோதனையும் வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அந்தக் காவல்நிலையத்தில் பணிபுரிந்த எஸ்ஐ இருவரையும், சஸ்பெண்ட் செய்தார். மேலும், அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும், தற்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது, கண்டிப்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்தவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில், ஒருவருக்கு வேலை வழங்கப்படும் எனவும், தலா 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

HOT NEWS