மதுரையில் தற்பொழுது வேகமாக பரவி வருகின்றது கொரோனா வைரஸ். இதனால், தெற்குமாசி வீதி காவல்நிலையத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது.
தமிழகம் எங்கும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தின் 22 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் பகுதிகளாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து கட்டுக்கடங்காத வேகத்தில், இந்த கொரோனா வைரஸானது பரவி வருவதால், சென்னை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், முழு ஊரடங்கானது விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக புதிய நோய்த்தொற்றுகள் இல்லை. 6 மாவட்டங்களில் 10 நாட்களாக நோய்த்தொற்றுகள் இல்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 1937 ஆக உயர்ந்துள்ளது. அதில், 1101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. மதுரையில் மொத்தம் 79 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், புதிதாக மதுரை தெற்கு மாசி வீதி காவல் நிலையத்தினைச் சேர்ந்த இரண்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தெற்கு மாசி வீதி காவல் நிலையம் மூடப்பட்டது. அந்த காவல்நிலையம் முழுக்க, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இது தற்பொழுது, மதுரையில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றது.