மகா முனி திரைவிமர்சனம்!

06 September 2019 சினிமா
magamuni.jpg

ஒரு உண்மையை இங்கு கூற வேண்டும். இத்திரைப்படம், நான்கடவுள் படத்தினால், ஆர்யாவிற்கு எவ்வளவு பெயர் கிடைத்ததோ, அவ்வளவு பெயரை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது ஒரு நிதர்சனமான உண்மை. என்னடா கோட் கோபிநாத் மாதிரி விமர்சிக்கிறாங்களேன்னு யாரும், நினைக்க வேண்டாம்.

இந்தப் படத்திற்கு இன்னும் கொஞ்சம் விளம்பரத்தை, தூக்கிப் பிடித்து இருக்கலாம். அந்த அளவிற்கு இந்தப் படம் மிக நன்றாகவே உள்ளது. படத்தைப் பார்க்கும் பொதுமக்களும், மிகவும் ரசிக்கின்றனர். ஒரு ஆர்யா வரும் படங்களே மொக்கையாக தோல்வி அடைந்தன. இதில் இரண்டு ஆர்யா கண்டிப்பாக, இப்படமும் மொக்கை வாங்கும் என நினைத்தவர்களுக்கு, அவர்களுடைய நினைப்பில் மரண அடி கொடுத்துள்ளது இந்த மகா முனி.

இரட்டைக் கதாப்பாத்திரத்தில், எம்ஜிஆர் முதல் சிம்பு வரை அனைவருமே, நடித்து விட்டனர். பொதுவாக இரட்டை வேடம் என்றால், ஒருவர் நல்லவராக இருப்பார் மற்றொருவர் கெட்டவராக இருப்பார். இல்லை என்றால், ஒருவரை மற்றொருவர் பழிவாங்கும் விதத்தில் படத்தினை உருவாக்கி இருப்பர்.

இந்தப் படத்தில் முதல் வகை கதையைப் பயன்படுத்தி உள்ளனர். இரண்டு ஆர்யா படத்தில் உள்ளனர். ஒருவர் கொலைக்காரன் மற்றொருவர் கிட்டத்தட்ட சித்தர் போல. இவர்களுக்குள் நடைபெறும் சீரியஸான குழப்பமே இந்த மகா முனி.

ஒரு கதாபாத்திரம் காஞ்சிபுரத்திலும், மற்றொரு கதாபாத்திரம் ஈரோட்டிலும் வசித்து வருகிறது. மகா என்ற கதாபாத்திரம், டாக்ஸி டிரைவராகவும், கொலை காரனாகவும் இருக்கிறார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மனைவி. இதில் மனைவிக் கதாப்பாத்திரத்தில் இந்துஜா நடித்துள்ளார். இந்த மகா கதாப்பாத்திரம், இளவரசுவின் அடியாளாக வருகிறார். இளவரசு ஒரு கொடூரமான அரசியல்வாதி.

மற்றொரு கதாபாத்திரம் முனி. இது ஈரோட்டில் வசித்து வருகிறது. இவர் ஆன்மீகவாதி, இயற்கை விரும்பி, விதைப்பது, இயற்கையை நேசிப்பது, இறைவழியில் செல்வது அமைதியாக வாழ்வது என நிம்மதியானக் கதாபாத்திரம். இதில், முனி தன் தாயுடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். அவரை கல்லூரிப் படிக்கும் மஹிமா காதல் செய்கின்றார். மஹிமாவின் தந்தை வழக்கம் போல், சாதி வெறி பிடித்த ஜெயப்பிரகாஷ். சாதியைக் காரணம் காட்டி, முனியை எதிர்க்கிறார்.

இதுவரைக்கும் கதை சாதாரணமாக இருக்கின்றது. பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால், மகா கதாப்பாத்திரம் கொலை செய்துவிட்டு, காவல்துறைக்குப் பயந்து ஓடுகிறது. அப்பொழுது, எதிர்பாராத விதமாக, முனி கதாப்பாத்திரத்தை கைது செய்கிறது காவல்துறை. அவர்கள் பிடியில் இருந்து முனி தப்பித்தாரா, அவருடையக் காதல் கை கூடியதா, மகாவிற்கு என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதை ஏற்கனவேப் பல படங்களில் காட்டப்பட்டு இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரம் மிக அருமையானது. அதைப் பாராட்டாமல், விமர்சனம் செய்வது தவறான செயல். ஏனெனில், படம் மொக்கையாக இருந்தால், கழுவி ஊற்றும் நாம், நன்றாக இருந்தால், பாராட்ட வேண்டியது அவசியம் தானே.

படத்தில் வரும் அனைத்துக் கதாப்பாத்திரங்களையும், மிக நுணுக்கமாக மற்றும் நுட்பமாக வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அந்தக் கதாப்பாத்திரங்கள் செய்யும், ஒவ்வொரு செயலிலும், அவ்வளவு நேர்த்தி மற்றும் வித்தியாசத்தைக் காட்டி அசத்தியும் இருக்கின்றார்.

ஆர்யா நடிக்கும் அனைத்துப் படங்களிலுமே, நம்மை ரசிக்க வைப்பார். ஆனால், அது காதல் மன்னனாகவோ, அல்லது நல்ல நண்பனாகவோ இருக்கும். ஆனால், இப்படத்தில், இறுக்கமான முகம், கனமானக் கதாப்பாத்திரம் என அதிக வித்தியாசம் காட்டி அசத்தி இருக்கிறார். படத்தின் கதாநாயகிகளின் நடிப்பு அருமை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுமே நம்மை ரசிக்க வைக்கின்றன.

பொதுவாக, படத்தின் பாடல்கள் தான் படத்தினைப் பற்றிப் பேச வைக்கும் விஷயமாகும். ஒரு படத்தின் பாடல் தான் முதலில் வெளியாகின்றது. அப்படி வெளியாகும் பாடல்கள் ஹிட்டாகி விட்டால் போதும், படத்திற்கு போதுமான அளவிற்கு, பப்ளிசிட்டி கிடைக்கும். இல்லையென்றால், படம் வெளியாகி படத்தினைப் பற்றிப் பலரும் நல்ல விதமாகப் பேசினாலே, படத்தின் வெற்றி சாத்தியமாகும். இப்படத்தின் பாடல்கள் உண்மையில் ஹிட்டாக வில்லை. அது இப்படத்தின் பெரும் பின்னடைவு தான். ஆனால், பிண்ணனி இசையில், படத்தினைத் தூக்கிப் பிடித்திருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.

எது எப்படியோ, ஆர்யாவின் ரசிகர்கள் உண்மையில், அவரைக் கொண்டாடுவார்கள் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. மகா முனி, மகா வெற்றி.

ரேட்டிங் 4.0/5

HOT NEWS