சிவசேனா ஆட்சியமைக்க மஹாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு!

11 November 2019 அரசியல்
devendrafadnavis.jpg

பாஜகவிற்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருந்த மஹாராஷ்டிரா ஆளுநர், தற்பொழுது சிவ சேனாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக மற்றும் சிவ சேனா கட்சிகள், கூட்டணியாக இணைந்துப் போட்டியிட்டனர். இதில் பாஜக 105 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிவ சேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதனையடுத்து, சிவ சேனா கட்சியானது, இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி உட்பட அமைச்சர் பதவிகளில் சமமான பங்கு வேண்டும் எனக் கோரியது. இதனை தொடர்ந்து, பாஜக ஏற்க மறுத்து வந்தது. இதனால், மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பாஜகவினை ஆட்சியமைக்க மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று ஆளுநர் மாளிகை சென்ற பாஜகவினர், தங்களிடம் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை என்றுக் கூறிவிட்டனர். இதற்கடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் திரு. சந்திரகாந்த் படீல் பேசுகையில், நாங்கள் ஆளுநரிடம் பெரும்பான்மை இல்லை எனக் கூறிவிட்டோம். சிவ சேனா ஆட்சி அமைக்க நினைத்தால், தாராளமாக ஆட்சி அமைக்கட்டும். அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் எனக் கூறினார்.

தற்பொழுது, பாஜகவிற்கு அடுத்து, அதிக இடங்களில் வென்ற சிவ சேனா கட்சியினை ஆட்சியமைக்க அழைத்துள்ளார் ஆளுநர். இதற்காக, மற்றக் கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது சிவசேனா.

HOT NEWS