மகர ஜோதி தரிசனம்! லட்சக்கணக்கானப் பக்தர்கள் குவிந்தனர்!

15 January 2020 அரசியல்
makarajyothi.jpg

இன்று கேரளாவில் நடைபெற்ற மகர ஜோதி தரிசனத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆண்டு தோறும், சபரி மலையில் மகர ஜோதி தரிசனம் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு, மண்டல பூஜைக்காக 60 நாட்களுக்கு, ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பூஜையில், முக்கிய நிகழ்வான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுவதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால், கடந்த இரண்டு நாட்களாக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கேரள அரசாங்கமும், சபரிமலை தேவஸ்தானமும் சிறப்பாக செய்து இருந்தன. இன்று மாலை ஆறு மணியளவில், பதினெட்டாம் படிக்கு வந்த ஐயப்பனின் திருவாபரண பெட்டிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானம், பக்தர்களுடன் இணைந்து தங்களுடைய வரவேற்பினை அளித்தது.

பின்னர், பதினெட்டாம் படியில் வைத்து, அந்த திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், அங்கிருந்து பதினெட்டாம் படி வழியாக நகைப் பெட்டியானது, ஐய்யபன் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, சரியாக 6.35 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்ப தரிசனம் அனுமதிக்கப்பட்டது. மாலை 6.45 மணியளவில், பொன்னம்பல மேட்டில், ஜோதி தெரிந்தது. சுமார் மூன்று முறைத் தெரிந்த இந்த ஜோதியினைப் பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷங்களை எழுப்பி வணங்கினர்.

இந்த ஜோதியானது, ஐயப்பனின் ரூபமாக பார்க்கப்படுகின்றது. மகர ஜோதி தரிசனம் முடிந்த பின்னர், பக்தர்கள் வீடு திரும்புவதற்கு வசதியாக சுமார் 950 பஸ்கள் தற்பொழுது இயக்கப்பட உள்ளது.

HOT NEWS