உள்ளாட்சித் தேர்தலில் போட்டி கிடையாது! கமல்ஹாசன் அறிவிப்பு!

09 December 2019 அரசியல்
kamalhaasan23.jpg

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவது கிடையாது என, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இது குறித்து, அக்கட்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்கள் தேர்வாக இருக்கப் போவதில்லை எனும் உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மாற்றத்தை இலட்சியமாகக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் அதைத் தவணைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவதில் எந்தச் சாதனையும் இல்லை.

மக்கள் நீதி மய்யத்தின் வெற்றிக்கான வித்து, சாதூர்யமோ பண பலமோ அல்ல. நேர்மையும் மக்கள் பலமுமே ஆகும். இத்தேர்தலில், மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப் போகின்றது. என்பதே பகிரங்கப் படுத்தப்படாத நிஜம். மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை. ஆதலால், மக்கள் நீதி மய்யத்தார் ஏற்கனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே நமது பிரகடமாக இருக்க வேண்டும்.

இதுவே என் ஆசையும் அறிவுரையுமாகும். வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலம்பேணி நற்பணிகள் செய்வோம். நாளைப் பறக்கப் போகும் நம் வெற்றிக் கொடியே தமிழகத்தின் அன்னக்கொடியுமாகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். இதை மக்கள் திண்ணமாக நம்பவும் வைப்போம். 2021ம் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே, நம் இலட்சியமாக இருப்பின், வெற்றி நிச்சயம், என கமல்ஹாசனின் கையொப்பத்துடன் அறிக்கை வெளியாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கணிசமான வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதிமய்யம் அடுத்து நடைபெற்ற இடைத் தேர்தலிலும், தற்பொழுது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் பங்கேற்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இவர், அவருக்காக காத்திருக்கிறாரோ?

HOT NEWS