மங்களூரூ வெடிகுண்டு விவகாரம்! குற்றவாளி தானாக முன் வந்து சரண்!

23 January 2020 அரசியல்
mangalorebombblast1.jpg

மங்களூரூ விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர், தாமாக முன் வந்து போலீசில் சரணடைந்துள்ளார்.

கடந்த 20ம் தேதி அன்று, மங்களூரூ விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் அருகில் கேட்பாரற்று அனாதையாக, ஒரு பை இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்தப் பையினைக் கைப்பற்றிய போலீசார் அதில் மூன்று வெடிகுண்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்தப் பையில் இருந்து வெடிகுண்டுகளை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்தனர்.

பின்னர், அந்த வெடிகுண்டினை வைத்த நபர் பற்றிய தகவல்களை விசாரிக்க ஆரம்பித்தனர். விமான நிலையத்தில் உள்ள, சிசிடிவி காட்சிகளை பார்த்து ஆய்வு செய்ததில், ஆட்டோவில் வந்த இளைஞர் ஒருவர் கையில் அந்த வெடிகுண்டுகள் இருந்த பையினைக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவருடையப் புகைப்படத்தினைக் கைப்பற்றிய போலீசார், கர்நாடகாவின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

அவர் பெயர் ஆதித்யா ராவ் என்றும், உடுப்பி மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அவருடைய வீட்டிற்கு விரைந்த போலீசார், அங்கிருந்த அவருடையக் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், போலீஸ் வருவதற்குள் ஆதித்யா ராவ் தப்பித்து விட்டார்.

இதனையடுத்து, நேற்று பெங்களூருவில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்த ஆதித்யா ராவ், நான் தான் மங்களூரூ விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தேன் என கூறி சரணடைந்தார். இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் தற்பொழுது தான் சிறையில் இருந்து வெளி வந்துள்ளார் எனவும், ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஜினியரிங் படித்துள்ள அவர், எம்பிஏ பட்டப்படிப்பும் படித்துள்ளார். வேலை இல்லாத காரணத்தால், வெடி குண்டுகளை தயாரிக்க தேவையானப் பொருட்களை ஆன்லைனில் வாங்கியதாகவும், பின்னர் எவ்வாறு வெடிகுண்டு செய்வது என யூடிப்பில் பார்த்துக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரைத் தற்பொழுது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS