நல்லடக்கம் செய்யப்பட்டது பழனியின் உடல்! ஆசிரியர் பணி கேட்கும் மனைவி!

18 June 2020 அரசியல்
ladakhsoldierpalani.jpg

இன்று இந்தியாவிற்காக உயிர்தியாகம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் பழனியின் உடல், இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜூன் 15ம் தேதி அன்று, இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, சீன இராணுவத்தினரால் தாக்கப்பட்ட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், அவர்களுடைய உடல்களானது, அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. வீரமரணம் அடைந்த பழனியின் உடலானது, மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அதற்கு மதுரை கலெக்டர் வினய் மற்றும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், முப்படை உயரதிகாரிகள், எம்எல்ஏ சரவணன், மற்றும் போலீஸ் உயரதிகாரிகளும் தங்களுடைய மரியாதையை செய்தனர். பின்னர் அவருடைய பூத உடலானது, ஆம்புலன்ஸிற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து அவருடைய சொந்த ஊரான கடுக்கலூர் நோக்குக் கொண்டு செல்லப்பட்டது. ராமநாதபுரத்தில் உள்ள அந்தக் கிராமத்தின் எல்லையை அடைந்ததும், பழனியின் உடலானது இராணுவ வாகனத்திற்கு மாற்றப்பட்டது. அவருக்கு இந்திய தேசியக் கொடியானது போர்த்தப்பட்டது. மேலும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.

அவருடைய உடலுக்கு இராணுவ அதிகாரிகள் மரியாதை செய்தனர். பின்னர், அவருடைய உடலை தயாராக வைத்திருந்த இடுகாட்டிற்குக் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து, அவருடைய குடும்பத்தார் அவருடைய உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதையை செய்தனர். பின்னர், 21 குண்டுகள் முழங்க, பழனிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உட்பட பலரும், தங்களுடைய மரியாதையை செய்தனர்.

இதனையடுத்து, அவருடைய உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் அறிவித்த 20 லட்ச ரூபாய் உதவித் தொகையானது, கலெக்டர் மூலம் பழனியின் மனைவிக்கு வழங்கப்பட்டது. இறந்தப் பழனிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக, எனக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும், நான் ஆசிரியர் பயிற்சி முடித்தவர் எனவும், எனவே தனக்கு ஆசிரியர் பணி வழங்கினால் என் குழந்தைகள் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் எனக் கோரிக்கை வைத்தார்.

ஏற்கனவே, தகுதியுள்ள பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS