வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்குப் பிறகு, மாஸ்டர் பட சூட்டிங் நடைபெற்ற இடத்தில், விஜயின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
கடந்த வாரம், நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், பைனான்சியர் அன்புச் செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பிகில், படத்தில் பண முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்ற விதத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
இதில், விஜயிடம் இருந்து என்ன பறிமுதல் செய்தனர் என்பது பற்றி, எவ்விதத் தகவலையும் வருமான வரித்துறையினர் குறிப்பிடவில்லை. ஆனால், பைனான்சியர் அன்புச்செழியனின் இடங்களில் இருந்து, 77 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 160 கோடிக்கும் அதிகமான பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பத்திரங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விஜயின் வீடு மற்றும் அவரிடம் இருந்து, எதுவும் கைப்பற்றப்படவில்லை என, சமூக வலைதளங்களில் விஜயின் ரசிகர்கள் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர். இது பழிவாங்கும் செயல் என ஒரு சிலரும் தங்களுடையக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நெய்வேலியில் உள்ள இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற, மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். அப்பொழுது, பாஜகவினர் அங்கு போராட்டம் நடத்தினர். திடீரென்று அங்கு குவிந்த விஜயின் ரசிகர்கள், பாஜகவினருடன் சண்டையிட ஆரம்பித்தனர். இதனையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினைக் கலைத்தனர். இதற்கு அடுத்த நாள், விஜய் படப்பிடிப்பிற்கு, மத்தியத் தொழிற்படை பாதுகாப்பும், தமிழகக் காவல்துறையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இருப்பினும், ஞாயிற்றுக் கிழமையான நேற்று, கட்டுக்கடங்காத கூட்டம் குவியத் தொடங்கியதால், நடிகர் விஜயே ரசிகர்களை சென்று சந்தித்தார். அப்பொழுது, அங்கிருந்த ரசிகர்கள் தலைவா என கத்தினர். அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் விஜய். வருமான வரித்துறையினரின் சோதனைக்கு முன் வரையிலும், இந்த சூட்டிங் குறித்த பரபரப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்து விட்டது போல் ஆகிவிட்டது என, ரசிகர்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.