மிக மிக அவசரம் திரைவிமர்சனம்!

10 November 2019 சினிமா
migamigaavasaram.jpg

பொதுவாக போலீசாரைப் பற்றிப் பல படங்கள் வந்தாலும், பெண் போலீஸ் பற்றியக் கதைகள் மிகக் குறைவாக வந்துள்ளன. அவ்வாறு வந்தாலும், அந்த போலீஸ் எதார்த்தமாக இருக்காது. ஆனால், ஒரு பெண் போலீஸ் சந்திக்கும் சங்கடங்கள், பிரச்சனைகள் குறித்து விவரிக்கும் திரைப்படம் தான் இந்த மிக மிக அவசரம் திரைப்படம்.

பெரும்பாலும் பெண்கள் பற்றியப் படம் என்றால், பெமினிசம், கற்பழிப்புப் புகார், பழிவாங்கும் படம், பேய் படம் என்று தான் வரும். இந்தப் படத்தில், ஒரு பெண் போலீஸ் எப்படி இயற்கை உபாதையை கழிக்கின்றார் என்பதை படமாக எடுத்துள்ளனர்.

படத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதில், ஸ்ரீபிரியங்காவும் ஒருவர். அவர் மீது ஆசைப்படும் சபல எண்ணம் கொண்ட இன்ஸ்பெக்டர். தன்னை பிரியங்கா கண்டுகொள்ளாமல் இருப்பதனால், ஆத்திரம் அடையும் அவர், ஒரு விஐபி வரும் பொழுது, மொட்டை வெயிலில், பாலத்தில் நின்று பாதுகாப்பு அளிக்கக் கட்டளையிடுகின்றார். மேலதிகாரியின் பேச்சினைத் தட்ட முடியமால், பாலத்தில் நிற்கும் பிரியங்காவிற்கு, இயற்கை உபாதை வருகின்றது. நீண்ட நேரமாக நிற்கும் நிலைமையில், அவர் எப்படி அதனை சமாளித்தார். இயற்கை உபாதையைக் கழித்தாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

மற்றபடி, படதில் வரும் அனைத்து விஷயங்களுமே ஊறுகாய்க்குத் தான். படத்தில் பெண் காவலர்களுக்கு உள்ள கஷ்டங்களைக் காட்ட வேண்டும் என இப்படத்தினை எடுத்துள்ளனர் என்பது மட்டும், மிகத் தெளிவாகத் தெரிகின்றது. மிக மிக அவசரம் எனப் பெயர் வைத்த பொழுது, ஒரு வேளை உயிரைக் காக்கும் பணியை அவசரமாக செய்கின்றனர், அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்கின்றனர் என நினைத்துப் போனால், காவல் பணியில் உள்ள பெண்ணின் அவசரத்தைப் படமாக்கி நமக்கு அவர்களுடைய வலியினை காண்பித்துள்ளார் மாநாடு பட தயாரிப்பாளரும், இப்படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்திற்கு, பெண் காவலர்கள் முதல் ஆண் காவலர்கள் வரை அனைவருமே தங்களுடைய ஆதரவினை தெரிவித்து உள்ளனர் என்பது தான் இப்படத்தின் வெற்றி. இருப்பினும், படத்தின் நேரத்தினை இன்னும் சற்று குறைத்து இருக்கலாம். ஏற்கனவே, ஒன்றரை மணி நேரம் ஓடும் சிறிய படம் என்றாலும், இன்னும் குறைத்து அத்துடன் சற்று காமெடியும் சேர்த்து இருந்தால், இந்தப் படத்தின் வெற்றியானது உறுதியாகி இருக்கும்.

இப்படத்திற்கு விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மற்றக் கதாபாத்திரங்களுக்குப் பெரிய அளவில் வேலை இல்லை. பெரிய அளவில் செலவில்லாமல் எடுக்கப்பட்டுள்ளது என்றால், அது மிகையாகாது.

மிக மிக அவசரம், மிக மிக அவசியம்.

ரேட்டிங் 2/5

HOT NEWS