கமல்ஹாசனிடம் மூன்று மணி நேரம் விசாரணை! கண்டனம் தெரிவித்த மையம்!

04 March 2020 அரசியல்
maiamelection1.jpg

இந்தியன்-2 படத்தின் சூட்டிங்கில் கிரேண் விழுந்து ஏற்பட்ட விபத்து காரணமாக, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனால், பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, கமல்ஹாசன் மற்றும் அப்படத்தின் இயக்குநர் சங்கர் ஆகியோர் காவல்துறையிடம் நேரில் ஆஜராகி, விராணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று, கமல்ஹாசன் போலீசில் ஆஜராகி, மூன்று மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தார். இது குறித்து, தற்பொழுது மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், சென்ற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி அன்று இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இதற்காக எங்கள் தலைவர் அவர்களை சாட்சி என்ற பெயரில்,காவல்நிலையத்திற்கு அழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

விபத்து நடந்த நான்கு நொடிகளுக்கு முன்பு தான், தலைவர் அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளார். இந்த மன வேதனையினால் தான், பிப்ரவரி 21ம் தேதி அன்று, எங்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் அவர் பங்கேற்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் இனிமேற்கொண்டு நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஊழியர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு மற்றும் காப்பீடு செய்து தர வேண்டும் என்று, தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிக்கையாக கொடுத்துள்ளார்.

60 வருட சினிமா துறையில், 250 படங்களுக்கும் மேலாக நடித்து வரும் எங்கள் தலைவர் சினிமாத் துறையைச் சார்ந்த அனைத்து ஊழியர்கள் மீதும் மிகுந்த அக்கறைக் கொண்டவர். 1980ம் ஆண்டு, ரசிகர்மன்றம் வேண்டாம் என்று ஒதுக்கி, மக்களுக்கு நல்ல சேவைகளைச் செய்யும் மக்கள் நற்பணி இயக்கத்தினை ஏற்படுத்தியவர் எங்கள் தலைவர். கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியினை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி அன்று, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை ஆரம்பித்து, முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளைப் பெற்று மக்களிடம் ஆதரவு பெற்றுள்ளோம்.

எங்கள் வளர்ச்சியினைப் பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலமாக சாட்சி என்கின்ற பெயரில், மூன்று மணி நேரம் விசாரணை செய்துள்ளது. தமிழக அரசே இந்த செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும். தலைவர் மீது சிறு துரும்பு பட்டாலும், எங்கள் லட்சக்கணக்கான இயக்கத் தோழர்கள் அவருக்கு அரணாக நின்று பாதுகாப்போம் என்றும் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம் என, தன்னுடயை அறிக்கையினை மக்கள் நீதி மய்யம் சார்பில், நற்பணி இயக்க அணியின் மாநில செயலாளர் தங்கவேலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

HOT NEWS