ஏப்ரல் 8ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்! மோடியிடம் இருந்து போன் கால்!

05 April 2020 அரசியல்
modistalin.jpg

வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி அன்று, இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தற்பொழுது இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் அநாவசியமாக வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பொதுமக்கள் இதனை சற்றும் மதிக்காமல் வீதிகளில் சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். வீட்டிலேயே இருக்கும்படி, பொதுமக்களுக்கு, மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்தன.

போலீசாரும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன்கள் மூலமும், கண்காணிப்பு பணியினை செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது. இதனால், இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இன்று காலை முதல், பிரதமர் மோடி போன் செய்து பேசி வருகின்றார்.

அவருடன் பலத் தலைவர்களும் பேசியுள்ளனர். அந்தந்த மாநிலங்களின் விவரங்களையும் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி அன்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வர வேண்டும் என, அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில், பாமக, அஇஅதிமுக மற்றும் திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.

திமுக தலைவர் முகஸ்டாலின், பாமகவின் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி போன் செய்து பேசியுள்ளார் என, தம்முடைய சமூக வலைதளங்களில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஊரடங்கானது நீட்டிக்கப்படலாம் அல்லது எமர்ஜென்சியானது அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS