உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தினை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
உலகளவில் பரவி வந்த கொரோனா வைரஸிற்கு, தற்பொழுது தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இண்ஸ்ட்டிடியூட் தயாரித்து உள்ள கோவீசீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டன. இந்த சூழலில், இந்த மருந்தின் மீதான எதிர்பார்ப்பானது, அதிகரிக்கத் துவங்கியது.
இந்த மருந்தினை, இன்று முன்களப் பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியானது துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனை இன்று காலை 10.30 மணியளவில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார். இது குறித்து அவர் பேசுகையில், எல்லாரும் என்னிடம் எப்பொழுது கொரோனா ஊசி வரும் எனக் கேட்டார்கள். இப்பொழுது கூறுகின்றேன். கொரோனா தடுப்பூசி தற்பொழுது வந்துவிட்டது. இந்தியா முழுவதும் 3,006 மையங்களில் இந்த ஊசியானது விநியோகிக்கப்பட உள்ளது. நான் இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக, இந்த தடுப்பூசியானது 3 கோடிக்கு போடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின்னர் 30 கோடி பேருக்கு இந்த ஊசியானது போடப்படும். இதில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்கு கீழே உள்ள நோயாளிகள் என பிரித்து வழங்க உள்ளனர். தமிழ்நாட்டினைப் பொறுத்த வரையில் 166 மையங்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு இந்த ஊசியானது போடப்பட உள்ளது. இதனை தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் துவக்கி வைக்க உள்ளார்.