2017ம் ஆண்டு கேரளாவில் புகழ்பெற்ற நடிகை ஒருவரை, காரில் கடத்தி பாலியல் தொல்லை செய்ததற்காக, நடிகை திலீப் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றது.
இவ்வாறு மலையாள திரை உலகில் பலரும், பல சோதனைகளை சந்திப்பதாக சினிமாத்துறையினைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, டபிள்யூசிசி என்ற குழுவாக அவர்கள் இணைந்து, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஹேமா தலைமையில், விசாரணை ஆணையத்தினை உருவாக்கியது கேரள அரசு.
அந்த ஆணையத்தில், நடிகைகள், போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் பெண் ஆர்வலர்கள் எனப் பலரும் அதில் இணைந்திருந்தனர். அந்த ஆணையமானது, கேரள சினிமாவின் பல துறைகளிலும், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பாலியல் தொல்லைகள் என அனைத்தைப் பற்றியும், விரிவான விசாரணை நடத்தியது.
விசாரணையை முடித்து, தங்களுடைய அறிக்கையை அந்தக் குழுவானது, முதல்வர் பினராய் விஜயனிடம் தாக்கல் செய்தது. அவர்கள் கொடுத்துள்ள அந்த அறிக்கையில் இருக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. அதில், மலையாள சினிமாவில் பெண்களுக்கு அதிகமானத் தொல்லைகள் இருக்கின்றன எனவும், நடிகைகள் தங்களுடைய தயாரிப்பாளர் மற்றும் நடிகரை திருப்திபடுத்தினாலே, பட வாய்ப்பு வழங்கப்படுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது. பலரும் இது பற்றி பேசத் தயங்கியுள்ளனர். மேலும், பெண் ஊழியர்களுக்கு போதிய கழிப்பிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் செய்து தரப்படுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.
பல குற்றச்சாட்டுக்களை இந்த அறிக்கையில் கூறியுள்ளதால், விரைவில் கேரள அரசு கடுமையான சட்டத் திட்டங்களை உருவாக்கும் எனவும் கேரள சினிமா உலகில் இருப்பவர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.