ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார்.
தமிழில் சாமி படங்கள் வந்து, நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டது. தொடர்ந்து பேய் படங்களையே வெளியிட்டு வருகின்றனர். இந்த சாமி படமானது, நகைச்சுவையாகவும், எவ்வாறு சாமியார்கள் மக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதிக்கின்றார்கள் எனவும், அப்பட்டமாக முடிந்த வரைக் காட்டியிருக்கின்றனர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆர்ஜே பாலாஜி. அவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள, தனியார் டிவி சேனலில் செய்தியாளராக பணி செய்கின்றார். அங்குள்ள வெள்ளி மலைப் பகுதியில் உள்ள 43,000 ஏக்கர் இடத்தினை பகவதி பாபா கைப்பற்ற முயல்கின்றார்.
இது பற்றி, ஆறு ஆண்டுகளாக செய்திகள் பேசியும் எதுவும் நடக்கவில்லை. இடையில், அவருடையக் குடும்பமானது குல தெய்வக் கோயிலுக்கு செல்கின்றது. அங்கு தன்னுடையக் குடும்பத்தினைப் பற்றியும், வாழ்க்கையினைப் பற்றியும் அங்குள்ள மூக்குத்தி அம்மனிடம் புலம்புகின்றார் ஆர்ஜே பாலாஜி. புலம்பி முடித்து படுக்க வருவதற்குள், பிரபஞ்சத்தில் இருந்து மூக்குத்தி அம்மன் அங்கு வருகின்றார். பின்னர், என்ன நடக்கின்றது, பகவதி பாபா என்ன ஆனார், ஓடிப் போன ஆர் ஜே பாலாஜியின் தந்தை என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை.
திருப்பதி இருக்கும் பெருமாள் சக்தி வாய்ந்தவர் என்றால், அப்போ நான் யார் என ஆர்ஜே பாலாஜியின் குல தெய்வமான மூக்குத்தி அம்மன் கேள்வி கேட்பது, பக்திமான்களை பளார் என அறைவது போன்று உள்ளது. அனைத்து தெய்வங்களுமே சக்தி வாய்ந்தவை என கூறும் நயன்தாரா, அம்மனாகவே காட்சித் தருகின்றார். உலகத்திலேயே, மீடியா முன்பு தோன்றிய ஒரே கடவுளாகவும் ரெக்க்கார்ட்டுகளை செய்கின்றார். சத்குரு எனக் கூறிக் கொள்ளும் ஜக்கி வாசுதேவ், எப்படி வெள்ளியங்கிரி பகுதியினை ஆக்கிரமித்து உள்ளார் என்பதை இப்படம் காட்டுகின்றது.
இடையில் பகவதி பாபா, நித்தியானந்தா போல் காமெடி செய்து அசத்துகின்றார். மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாதி ஜாலி என்றால், இரண்டாவது பாதியோ காலி தான். 2வது பாதியில் சிரிப்பினை அதிகரித்து இருந்தால், இந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கும். பாடல்கள் சுமார் ரகம். கோயிலில் பக்தர்கள் எதற்காக வருகின்றார்கள், அவர்களை எவ்வாறு கோயிலைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கின்றனர் எனக் காண்பித்து, கோயிலில் நடக்கும் சேட்டைகளையும் நக்கலாகக் காட்டியிருக்கின்றார்கள்.
படத்தில் நடித்துள்ள ஊர்வசியினை பாராட்டியே ஆக வேண்டும். ஊர்வசி முகத்தினைப் பார்த்தாலே, சிரிப்பு வரும் அளவிற்கு அவர் காமெடி செய்கின்றார். தன்னுடைய நான்கு குழந்தைகளையும் அவர் எப்படி பார்க்கின்றார், அவர் சொல்லும் பொய்கள், செயல்கள் என அனைத்துமே நம்மை சிரிக்க வைக்கின்றன.
மொத்தத்தில் மூக்குத்தி அம்மன் இன்னும் ஜொலித்திருக்கலாம்.