மது மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் இப்படத்தில் இல்லாததற்கு முதலில் நன்றிகளும், வாழ்த்துக்களும்! இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து ஒரு விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வந்தது. இப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படமான மன்னன் படத்தின் காப்பி எனக் கூறி வந்தனர். ஆனால், இத்திரைப்படம் சிவா மனசில சக்தி படத்தின் இரண்டாம் படம் போல இருக்கும் என, இயக்குநர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்தத் திரைப்படத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், ராதிகா எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கார் ஷோரூமில் வேலை செய்யும் நபராக சிவகார்த்திகேயன் வருகிறார். டிவி சீரியல் தயாரிக்கும் ஓனராக வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத அளவில், ஸ்டேட்டசில் பிரச்சனை. இவர்கள் மோதல் காதலாக மாறியதா இல்லையா என்பது தான் கதை. யப்பா! எவ்வளோ பெரிய கதை. கேட்கும் போதே சற்று சளித்தாலும், இந்த கோடை விடுமுறைக்கு வேற வழியில்ல என்பது போலத் தான் இப்படம் வெளிவந்துள்ளது.
படத்தில் சதீஷ், யோகி பாபு போன்ற நடிகர்கள் இருந்தும் பெரிய அளவில் யாருக்கும் சிரிப்பு வரவில்லை.தன்னுடைய அதே நகைச்சுவை பார்முலாவை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். சிவாவுக்குத் தாயாக வரும், ராதிகா தன்னுடைய அனுபவத்தை அள்ளிக் கொட்டியிருக்கிறார்.
காமெடி நடிகர்களை விட, இவரே நல்லக் காமெடி செய்துள்ளார் எனக் கூறலாம். சிவாவிற்கு குடும்ப ரசிகர்கள் உள்ளனர் என்பதால், அவர்களை குறிவைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் முதல் பாதி இயக்குநருக்காகவும், இரண்டாம் பாதி சிவாவின் ரசிகர்களுக்காகவும் எடுத்திருக்கிறார்கள் எனக் கூறலாம்.
இயக்குநர் ராஜேஷ் படம் என்றாலும், இரண்டாம் பாதியில், ஒரு சில குழப்பங்கள், லாஜிக் ஓட்டைகள் உள்ளன. என்ன இப்போ, படம் ஜாலியா இருக்குல! அப்புறம் என்னத்துக்குய்யா லாஜிக் பாத்துக்கிட்டுன்னு, சிவா ரசிகர்கள் கூறுகின்றனர்.