போலாந்து நாட்டில் தற்பொழுது மீண்டும் ஒரு மர்மத் தூணானது உருவாகி இருப்பதால், விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொதுமக்களும் குழப்பத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் பேசுபொருளாக இருப்பது மர்மமாக உருவாகி மறையும் உலோகத் தூண் தான். அமெரிக்காவின் உட்டா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் தோன்றி மறைந்த இந்த உலோகத் தூணானது, பின்னர் ரோமேனியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தோன்றியது. பின்னர், திடீரென்று மறைந்தது. முதலில் அமெரிக்காவின் ஆள் நடமாட்டமில்லாத உட்டா மாகணத்தில் தான், இந்த உலோகத் தூணானது தோன்றியது.
இதனை யார் வைத்தார்கள் என விசாரிப்பதற்குள், சுவடே இல்லாமல் இது மறைந்துவிட்டது. பின்னர், அடுத்த நாளே, ரோமேனியாவில் தோன்றியது. பின்னர் பிரிட்டனிலும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும் தோன்றியது. இது எதற்காக தோன்றுகின்றது. இதனை வைப்பது மனிதர்களா அல்லது வேற்றுக் கிரகவாசிகளா என, பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த சூழலில், தற்பொழுது இந்த உலோகத் தூணானது போலாந்து நாட்டின் விஸ்துலா நதிக்கரையில் தோன்றியுள்ளது.
இது எவ்வாறு போலாந்து நாட்டிற்குள் வந்தது. எப்படி திடீரென்று முளைத்தது என்பதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. முக்கோண வடிவத்தில் நீளமாக, சுமார் 10 முதல் 15 அடி உயரமுள்ளதாக உள்ள இந்த தூணினை பொதுமக்கள் பலரும் சென்று பார்த்து வீடியோ மற்றும் செல்பிக்களை எடுத்து வருகின்றனர். இது தற்பொழுது பெரிய அளவில் குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது.