ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மூன்றாவது திரைப்படம் நான் சிரித்தால். இந்தப் படத்தினை சுந்தர் சி தயாரித்து உள்ளார். ஆதிக்கும், சுந்தர் சி.க்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் படத்தினை வேறு ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார்.
இந்நிலையில், நான் சிரித்தால் திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. முதல் இரண்டு படங்களும் ஹிட்டாகி விட்ட நிலையில், இந்த படமும் ஹிட்டாகிவிடும் என்ற தப்புக் கணக்குத் தான், இந்தப் படத்தினை விஷயத்தில் செய்திருக்கின்றனர். ஆதி நடித்தாலோ அல்லது ஏதாவது படத்திற்கு இசையமைத்தாலோ, பாடல்கள் அதிரடி சரவெடியாக இருக்கும். ஆனால், அவர் நடித்துள்ள நான் சிரித்தால் படத்தில், அப்படி எவ்விதப் பாடலும் இல்லை. தன்னுடையப் பழையப் பாடல்களையே மீண்டும், அப்படி இப்படி என்று வரிகளை மாற்றி உருவாக்கி இருக்கின்றார்.
படத்தின் பாடல்கள் டக் அவுட் ஆகிவிட்ட நிலையில், படமாவது சிக்சர் அடிக்குமா என நினைத்தால், போதும்டா சாமி என சொல்ல வைக்கின்றது. இந்தப் படத்தின் கதை ரொம்ப சாதாரணமானது தான். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆதி. அங்கு ஏற்படும் பிரச்சனையின் காரணமாக, அரியர்களை முடித்தால் தான் வேலை மீண்டும் கிடைக்கும் எனும் நிலை. இடையில், ஐஸ்வர்யா மேனனுடன் காதல். சோகம், கவலை என்றால் வரும் சிரிப்பு வியாதி, இதனால் வரும் வில்லங்கம். இவை தான் இந்தப் படத்தின் கதை.
படத்தில், நடித்துள்ளவர்கள் பெரும்பாலும், சிரிப்புத் துறைக்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும், நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. படத்தின் பெயரில் இருந்தே, இந்தப் படத்தின் கதையினை நீங்கள் உணர இயலும். ஆதி சிரித்தால் என்ன ஆகும் என்பது தான் படத்தின் தலைப்பாக இருக்கும் நான் சிரித்தால். படத்தில், ஆதியினைத் தவிர்த்து, மற்றவர்களுக்குப் பெரிய அளவில் வேலை இல்லை. வில்லனாக கேஎஸ் ரவிக்குமாரும், ரவி மரியாவும் நடித்துள்ளனர்.
இவர்களுக்கு மட்டுமே, படத்தில் ஒரு சில நல்லக் காட்சிகள் உள்ளன. மற்றபடி, நான் சிரித்தால் திரைப்படம், நம்மை கதற வைக்கின்றது. ஒரு நல்ல பாடலும் இல்லை. நல்ல வசனமும் இல்லை. நல்ல கதையும் இல்லை. ஆனால், படம் மட்டும் ஹிட் என்றுக் கூறிக் கொள்கின்றார்கள். அது தான் எப்படி என்றுத் தெரியவில்லை.
மொத்தத்தில் நான் சிரித்தால், அனைவரும் அழ வேண்டும்.