Rating:3.0/5
குடும்பத்துடன் படம் பார்த்துவிட்டு, இந்த வார விடுமுறைய மகிழ்ச்சியாகக் கழிக்க நினைப்பவர்களுக்கு, இப்படம் அருமையான விருந்து என்று கூறினால், அது மிகையாகாது.
பொதுவாக, சிவகார்த்திகேயன் படம் என்றாலே, அது குடும்பத்துடன் பார்க்கும் விதத்தில் தான் இருக்கும். அதே சமயம், பாண்டிராஜ் படமும் அப்படித் தான். பெரிய அளவில் ஆபாசம் என்பது இருக்காது. வன்முறை இருக்காது. ஆனால், அனைவரும் ரசிக்கும் விதத்தில் இருக்கும். இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்தால், எப்படி இருக்கும் என சற்று யோசித்துப் பார்த்தாலே, நீங்கள் இப்படத்திற்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வீர்கள்.
கடந்த சில படங்களாக சொதப்பிய, சிவா ஒரு நல்ல கம்பேக்கை கொடுத்துள்ளார் என்றுக் கூடக் கூறலாம். படத்தின் கதையை, படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்கள் மூலம், ஏற்கனவே கூறிவிட்டனர். படத்தின் கதையும் புதியது அல்ல. படத்தின் ஒவ்வொரு சீனையும் நம்மலா யூகிக்க முடிந்தாலும், நம்மால் படத்தினைப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு, பாசப்பினை பார்த்து கொஞ்சம் நாளாகி விட்டது என்று நமக்கேத் தோன்ற ஆரம்பிக்கிறது.
தமிழ் சினிமாவில், தற்பொழுது பேய் படங்கள், திரில்லர் படங்கள், குற்றம் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் காமெடி படங்களே, தற்பொழுது கோலோச்சுகின்றன. குடும்பப் படங்கள் வருவதும், அதனை இயக்கும் இயக்குநர்களும் மிகக் குறைவு. பாண்டிராஜ் போன்ற ஒரு சில இயக்குநர்களே, இந்த குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு, படங்களை இயக்குகின்றனர்.
ஒரு பெரிய குடும்பம். குடும்பத்தின் மூத்தவர் பாரதிராஜா. அவருடைய குழந்தைகளுக்குப் பிறந்தவர்கள் தான் சமுத்திர கனி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ். அவர்களுக்குள் நடக்கும், கலாட்டா, கலவரங்கள், பாசப் போராட்டங்கள், இறுதியில் இவர்கள் என்ன ஆனார்கள்? என்பதனை, மிகத் தெளிவாகவும், நேர்த்தியாகவும் காண்பித்துள்ளார் இயக்குநர்.
சீமராஜா படத்தில், சூரியின் காமெடியை கழுவி ஊற்றாத நபர் இல்லை. ஆனால், இப்படத்தில் அவருடையக் காமெடியை கொண்டாடாதவர்கள் யாரும் இல்லை எனக் கூறலாம். படத்தில் சூரி வரும் காட்சிகள் அனைத்திற்கும், சிரிப்பு சத்தம் ஒலிக்கிறது. ஆனால், சிவகார்த்திகேயன், சூரியை கலாய்க்கும் போது மட்டும், சற்று எரிச்சல் உண்டாகிறது.
சீமராஜா படத்தின் பாடல்கள், பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக செதுக்கியுள்ளார் இசையமைப்பாளர் டி.இமான். உண்மையில், இமான், சிவா மற்றும் சூரி கூட்டணியானது, தற்பொழுதுள்ள தமிழ் சினிமாவின், மிகவும் பலம் வாய்ந்தக் கூட்டணியாகவேப் பார்க்கப்படுகின்றது.
படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும், நம்மை ரசிக்க வைக்கின்றன. ஆனாலும், ஏம்ப்பா கடைசியில நம்ம சமுத்திரக்கனியையும் ஆட வச்சுட்டீங்களே என, அனைவரும் பேசிக் கொண்டே அதனையும் ரசிக்கின்றனர். படத்தின் நாயகிகள் இருவருமே, தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். அனு இமானுவேல், சிவகார்த்திகேயுனுடன் வரும் காதல் காட்சிகளில் நம்மை கவர்கிறார். இந்த ஐஸ்வர்யா ராஜஷ், உண்மையிலேயே சிவாவின் தங்கையாக இருப்பாரோ என, படம் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும் அளவிற்கு, மிக எதார்த்தமாக நடித்துள்ளார்.
எவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும், படத்தின் கதை பழையது என்பதால், நம்முடைய எண்ணங்களை, இப்படம் பெரிய அளவில் பாதிப்பது இல்லை.
மொத்தத்தில், நம்ம வீட்டுப் பிள்ளை சிவாவிற்கு நம்பிக்கையான பிள்ளை.