கீழடியில் கண்டெடுக்கப்பட்டு உள்ள பானைகள் மற்றும் மண்பாண்டப் பொருட்களில், நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக, பிரபல ஆய்விதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
நேச்சர் சயின்டிபிக் ரிப்போர்ட் எனப்படும் அந்த ஆய்விதழானது, இந்தியர்களால் நடத்தப்படுகின்றது. இதனை, விஐடி பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்திரசேகர் மற்றும் பலர் சேர்ந்து நடத்தி வருகின்றனர். அவர்கள் இது குறித்து, புதிய ஆற்வறிக்கையினை வெளியிட்டு உள்ளனர். அதில், கீழடியில் கண்டெடுக்கப்பட்டு உள்ள மண்பாண்டப் பொருட்களிலும், பானைகளிலும் வண்ணப்பூச்சுக்கள் உள்ளன. அதன் தனித்தன்மை என்னவென்றால், அதன் பளபளப்புத் தன்மையானது மாறாமல், அப்படியே உள்ளது.
அதனை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது அதில் நானோ இழைகள் இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழ் மக்கள் மண்பாண்டப் பொருட்களை செய்வதிலும், இரும்புப் பொருட்களை செய்வதிலும் கைத் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பது உலகறிந்த விஷயம் ஆகும். ஆனால், நானோ தொழில்நுட்பத்தினை அக்காலத்திலேயே பயன்படுத்தி இருப்பது பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தி உள்ளது. மிக உயர்வெப்பநிலையினைப் பயன்படுத்தி, இந்த நானோ தொழில்நுட்பத்தினை செயல்படுத்தி இருக்கலாம் எனப் பலரும் கருதுகின்றனர். அந்த மண்பாண்டப் பொருட்களில் உள்ள வண்ணப்பூச்சுக்கள் அனைத்தும், தாவரங்களில் இருந்து எடுத்துள்ளனர்.
இந்த வண்ணப்பூச்சுக்கள் தற்பொழுது வரை, புதுப் பொலிவுடனும், பளபளப்பாகவும், இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருந்து வந்துள்ளது. இதனை தற்பொழுது விஞ்ஞானிகள் வியந்து பார்க்கின்றனர்.