நிலவில் விக்ரம் லேண்டர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை காண முடியவில்லை என, நாசா அறிவித்துள்ளது.
இந்தியாவின், மிகப் பெரிய முயற்சியாக கருதப்படும் சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டர் என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி நிலவில் இறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைக் காண்பதற்கு, பாரதப் பிரதமர் மோடி உட்பட உலகமே காத்திருந்தது. இருப்பினும், நிலவின் தரையில் இருந்து சுமார், 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர் இருந்த பொழுது, அதனுடன் இருந்து வந்த தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால், அம்முயற்சி தோல்வி அடைந்ததாகக் கருதப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நிலவினை சுற்றி வரும் இந்தியாவின் சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம், விக்ரம் லேண்டர் விழுந்துள்ள இடத்தினை இந்தியா ஆராய்ச்சி செய்தது. அதன்படி, விக்ரம் லேண்டர் வேகமாக தரையில் மோதி இறங்கியதனால் தான், அதன் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்தது. இதனையடுத்து, அதனைத் தேடும் முயற்சித் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினைப் புகைப்படம் எடுத்துத் தர அமெரிக்காவின் புகழ் பெற்ற விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் உதவியினை இஸ்ரோ நாடியது. நாசாவும் முயற்சி செய்து பார்த்தது. ஆனால், நாசாவால் விக்ரம் லேண்டரைப் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இதனையடுத்து, கடந்த சனிக் கிழமை மீண்டும் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை ஆய்வு செய்தது. அங்கு விக்ரம் லேண்டர் இருப்பதற்கான, சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை என, அமெரிக்காவின் நாசா நிறுவனம் கூறியுள்ளது.
இந்தத் தகவலை, இஸ்ரோவிற்கு ஈமெயில் அனுப்பியுள்ளது நாசா. மேலும் அது கூறுகையில், ஒரு வேளை அது நாம் தேடும் இடத்தில் இருந்து, இருட்டுப் பகுதிக்குள் விழுந்து இருக்கலாம் என கூறியுள்ளது.