பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திராயன் 2 புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இஸ்ரோ நிறுவனம், நாசாவின் உதவியைக் கோரியது. இந்நிலையில், நாசா தன்னுடைய ஆர்பிட்டர் மூலம், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தினைப் புகைப்படம் எடுத்துத் தருவதாக கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, எப்பொழுது அந்தப் புகைப்படம் வெளியாகும் என, அனைவரும் காத்திருந்தனர். ஆனால், புகைப்படத்தை வெளியிடாமலேயே இருந்தது நாசா. தற்பொழுது, விக்ரம் லேண்டர் விழுந்தப் பகுதிகளின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது நாசா.
மேலும், இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், தரையில் பலமாக மோதி விழுந்துள்ளதால் தான், விக்ரம் லேண்டருடனான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், தற்பொழுது நிலவில் இரவு நேரம் என்பதால், அங்கு தெளிவாகப் புகைப்படம் எடுக்க முடியவில்லை எனவும், விரைவில், அக்டோபரில் அங்குப் பகல் பொழுது ஆரம்பிக்கும் பொழுது, அப்பொழுது தெளிவாகப் புகைப்படம் எடுக்க முடியும் எனவும் கூறியுள்ளது.
தற்பொழுது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் இல்லை. இது குறித்து கூறியுள்ள நாசா, நிலவில் தற்பொழுது இரவு நேரம் என்பதால், விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க இயலவில்லை எனவும், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தின், புகைப்படத்தினை மட்டுமே எடுக்க முடிந்தது எனவும் கூறியுள்ளது.