கருவளையம் என்பது தற்பொழுது, அனைவருக்கும் உள்ள பெரிய அழகுப் பிரச்சனை என்றுக் கூடக் கூறலாம். உடலின் தோல் வெள்ளையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், கண்ணைச் சுற்றிக் கருவளையம் விழுந்துவிட்டால், அவ்வளவுதான். எவ்வளவு லட்சணமான முகமாக இருந்தாலும், அவலட்சணமாக தெரியும். தங்க நிறத்தில் ஆணோ, பெண்ணோ யாராக வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால், கருவளையம் விழுந்துவிட்டால், அவர்களுடைய அழகு என்பது, ஓட்டை விழுந்தப் பானையில் தண்ணீர் ஊற்றுவதுப் போலத் தான்.
இந்தக் கருவளையம் எதனால், ஏற்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம். இந்தக் கருவளையம் அதிகம் உறங்கினாலும் ஏற்படும். சரியாக உறங்காவிட்டாலும் ஏற்படும். அதிக நீர், உடலை விட்டு வெளியேறிவிட்டாலும் ஏற்படும். அதிக வெப்பத்தாலும் உடலில் ஏற்படும்.
இந்தக் கருவளையப் பிரச்சனைக்கு கீழ்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே, எளிதாக இப்பிரச்சனைக்கு வீட்டிலேயே முற்றுப் புள்ளி வைக்கலாம்.
தேங்காய் எண்ணெய்யை தலைமுடியில் தேய்ப்போம். பின் கை மற்றும் கால்களில் தேய்த்துக் கொள்வோம். இந்தத் தேங்காய் எண்ணெய் பாக்கெட்டில் அடைத்ததைத் தவிர்க்கவும். கடைகளில், தனியாக விற்கும் செக்கு எண்ணெயை வாங்கிக் கொள்ளவும். அந்த எண்ணெய்யை, கண்ணின் கருவளையப் பகுதிகளில், இரவு உறங்கும் முன், தேய்த்துக் கொள்ளவும். பின்னர், காலையில், தூங்கி எழுந்ததும், வெதுவெதுப்பான சுடுநீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம், கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, முகம் பொலிவு பெறும்.
கண் கருவளையத்திற்கான, சிறந்த மருத்துவம் இந்த வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டிக் கொள்ளவும். அதனை குளிர்ந்த நீரில் வைத்து விடவும். வீட்டில், பிரிட்ஜ் இருந்தால், அதில் வைக்கவும். பின்னர், அதனை எடுத்து, கண்களில் வைக்கவும். தொடர்ந்து இதனைச் செய்யும் பொழுது, கண்ணீல் ஏற்படும் உஷ்ணம் நீங்கி, கண் கருவளையம் மறைந்துவிடும். உடனடியாக இந்த கருவளையம் நீங்க வேண்டும் என்றால், வெள்ளரிக்காயை, எலுமிச்சைச் சாற்றில் நனைத்து, அதனை மூன்று முதல் 5 நிமிடங்களில் கண்ணை மூடியப் பின், வைக்க வேண்டும். கவனமாக வையுங்கள். இல்லையென்றால், எலுமிச்சைச் சாற்றால் கண்ணில் எரிச்சல் ஏற்படும்.
பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது கண்ணைச் சுற்றியுள்ள, இந்தக் கருவளையத்தைப் போக்க வல்லது. இந்தக் குளிர்ச்சியானப் பாலை ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளவும். பின்னர், அதில், சுத்தமான காட்டன் பஞ்சினை எடுத்து, அதனை பந்து போல உருட்டிக் கொள்ளவும். அதனை பாலில் நனைத்து, கருவளையம் உள்ளப் பகுதிகளில் ஒத்தி எடுக்கவும். இவ்வாறு செய்த பின், அந்த பஞ்சினை கருவளையத்தில், ஒரு சில நிமிடங்கள் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம், கருவளையம் நீங்கும்.
தக்காளிக்கு கருவளையத்தைப் போக்கும் சக்தி உள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்தினால், கண்டிப்பாக கருவளையத்தை நம்மால் நீக்க முடியும். தக்காளியின் சாற்றை, சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். அதில், எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கருவளையத்தில் தடவவும். அவ்வாறு தடவி ஒரு பத்து நிமிடம் அமைதியாக இருக்கவும். இவ்வாறு, வாரம் இருமுறை என, தொடர்ந்து செய்து வர, கருவளையம் மறைந்து முகம் பொலிவு பெறும்.
காட்டன் பஞ்சினை, சிறிதளவு ரோஸ் வாட்டரை நனைத்துக் கொள்ளவும். பின்னர், நனைத்தப் பஞ்சினை எடுத்து, கருவளையத்தில் தேய்க்கவும். தொடர்ந்து தேய்ப்பதன் மூலம், கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.
கருவளையம் ஒரே நாளில் நமக்கு ஏற்பட்டுவிடுவதில்லை. அதுவும் படிப்படியாகவே நமக்கு வருகிறது. அது போக வேண்டும் என்றாலும், படிப்படியாகத் தான் போகும். எனவே, தொடர்ந்து மேற்கூரிய செயல்களை செய்தாலே, கருவளையப் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.