டிஎன்பிஎஸ்சி முறைகேடு! புதிய விதிகளை அறிவித்த டிஎன்பிஎஸ்சி!

06 February 2020 அரசியல்
tnpsc.jpg

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனை, டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளில், முறைகேடு நடைபெற்று இருப்பது, வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, இந்த முறைகேட்டினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக, 35 பேர் தற்பொழுது வரை கைது செய்துள்ளனர். மேலும், கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளையும், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சியின் விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில், வெற்றிப் பெற்றவர்களின் பெயர்களை, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட உள்ளனர். முதற்கட்டமாக, 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில், வெற்றிப் பெற்றவர்களின் பெயர்களை வெளியிட உள்ளனர்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல், டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை, இணையத்தில் கட்டணம் செலுத்தி, அவரவர் விடைத்தாள்களைப் பெற்று சரிபார்த்துக் கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி மூலம், பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கலந்தாய்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும், எந்த மாவட்டத்தில், எந்த துறையில் பணி காலியாக உள்ளது, இட ஒதுக்கீடு, உள்ளிட்ட விஷயங்கள் இனி, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒரே நேரத்தில் மூன்று தேர்வு மையங்களை, தேர்வு செய்யும் வசதியினை விரைவில் டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்த உள்ளது. இனி, தேர்வு எழுதுபவர்கள், மூன்று மாவட்டங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுதும் மையங்களை, தேர்வு ஆணையமே, தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்யும்.

ஒரு நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யாமல் இருக்க, தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு வரும், ஒவ்வொரு முறையும் ஆதார் கார்டின் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். தேர்வர்களின் கை ரேகையானது, தேர்வு எழுதும் முன் பெறப்பட்டு அதனை ஆதார் கார்டுடன் இணைத்து, சரிபார்த்த பின்னரே, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அடுத்த தேர்வுக்கு முன்பே, அதி உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், முறைகேடுகள் நடைபெறுவது தடுக்கப்படும் என, செய்தியாளர்கள் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

HOT NEWS