சூர்யா நடிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையில், வெற்றிக்கரமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் என்ஜிகே. நந்தகோபாலன் குமரன் என்பதன் சுருக்கமே இந்த என்ஜிகே.
படத்தில் விவசாயம் செய்யும், எம்டெக் படித்த இளைஞனாக வருகிறார் சூர்யா. சும்மா சொல்லக் கூடாது. 40யை கடந்தப் பின்னும், அதே இளமை இன்னும் சூர்யாவிடம் காண முடிகிறது. சாய் பல்லவியின் கணவனாக வரும் சூர்யா, சாய் பல்லவியிடம் சிக்கித் தவிக்கிறார். வேறு எதற்காக, எல்லாம் சந்தேகம் தான்.
ஏரியாவில் இருக்கும், ஒரு கட்சியின் தொண்டன் மூலம், அரசியல் ஆசை வருகிறது. ஒரு கட்சியில் அடிமட்டத் தொண்டனாக சேருகிறார். பின்னர், எப்படி, முன்னேறுகிறார். அவர் அரசியலில் ஜெயித்தாரா, இல்லையா என்பது தான் மீதிக் கதை.
படத்தில், அரசியலை வைத்து தொழில் செய்யும் கார்ப்பரேட் ஊழியராக ரகுல் ப்ரீத்தி சிங். படம் ஒரு வேளை குறிப்பிட்டத் தேதியில் வந்திருந்தால், கண்டிப்பாக வெற்றி அடைந்திருக்கும். இப்படத்தின் சூட்டிங் ஆரம்பித்தப் பின், நோட்டா மற்றும் எல்கேஜி போன்ற படங்கள் வெளியாகி விட்டதால், இப்படத்தின் சுவாரஸ்யம் குறைந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால், கணிக்க முடிகிறது.
இது செல்வராகவன் படம் என்பதால், அனைவருக்கும் ஒரு வித எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பார்ப்பு இந்த படத்தில் பூர்த்தி ஆகவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு, சுமாராகவே அவருடைய திறமையை இந்தப் படத்தில் காட்டியுள்ளார் என்று கூற வேண்டும். சூர்யாவின் நடிப்பினை அவர் சரியாகப் பயன்படுத்தி இருந்தால் கண்டிப்பாக இந்தப் படம் பிளாக் பஸ்டர் என்பதில் ஐயமில்லை.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என யுவனும், செல்வராகவனும் இணைந்தாலே, படத்தின் பாடல்கள் வெற்றி ஆகும் என நினைத்தால், படத்தில் ஒரு பாடலும் பெரிய அளவில் ரீச்சே ஆகவில்லை என்பது தான் உண்மை. படத்தின் பிஜிஎம்மை மட்டும் வைத்து எவ்வளவு நேரம் தான் யுவனும் சமாளிப்பார்.
பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தாலும், படத்தில் ஒரு வித வெறுமைத் தெரிகிறது. அந்த அளவிற்கு படத்தின் கதை, மிகவும் சுமாராக உள்ளது. படத்தினை சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் எனக் கூறலாம். சூர்யாவுக்காக, இந்தப் படத்தினை ஒரு முறைப் பார்க்கலாம்.