உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், அவர்களுக்காக உதவ முன்வர வேண்டும் எனவும், அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களுடைய வேண்டுகோளினை விடுத்தனர். இதனை முன்னிட்டு, இன்று மதியம் ஒரு மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தற்பொழுது அவர் அறிவித்துள்ள முக்கிய அறிவிப்புகளுக்கு, பலரும் தங்களுடையப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயினை அவர், இந்த வைரஸ் தொற்றுக்காக இடைக்கால நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 80 கோடி பேருக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு ஐந்து கிலோ கூடுதல் கோதுமை அல்லது அரிசி வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பருப்பும் வழங்கப்பட உள்ளது. இவைகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள எட்டு கோடியே 62 லட்சம் விவசாயிகளின், வங்கிக் கணக்குகளில், ஏப்ரல் முதல் மாதத்திற்குள் இரண்டாயிரம் ரூபாய் பணமானது முதற்கட்டமாக செலுத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 63 லட்சம் மகளிருக்கு, அடமானம் உள்ளிட்ட எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் 20 லட்சம் வரை, கடன் வழங்கப்படும். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் சுமார், 3 கோடியே 50 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு, மாநில அரசுகள் மூலமாக, 31,000 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸினைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, 50 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஜன்தன் கணக்குள் வைத்துள்ள பெண்களுக்கு, அவர்களுடைய வங்கிக் கணக்குளில் 500 ரூபாயானது, அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு, 2000 ரூபாயானது அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது.
மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்கு இரண்டு தவணையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பிஎப் பணத்தில் மூன்று மாத ஊதியம் அல்லது 75% பணத்தினை, பயனர்கள் எடுத்துக் கொள்ளலாம். மேலும், நூறு பணியாளர்களுக்குக் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு, பணியாட்களுக்குப் பதிலாக, மத்தியே அரசே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிஎப் பணத்தினை செலுத்தும் என அவர் அறிவித்துள்ளார்.
இதற்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்துள்ளது. ராகுல் காந்தி உட்பட பல தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர்.