கடன், தனியார் மயம்! 20 லட்சம் கோடியில் சீதாராமனின் அறிவிப்புகள்!

16 May 2020 அரசியல்
nirmalacorona.jpg

கடந்த நான்கு நாட்களாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை விட, பெரிய அளவில் தினமும் மாலை நான்கு மணியளில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

மே-12ம் தேதி அன்று, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இந்தியா சுயசார்பு பொருளாதாரத்தினை அடையும் பொழுது தான், 21ம் நூற்றாண்டின் வல்லரசாக மாற முடியும் என்று கூறினார். இந்தியா, சுயசார்பு பொருளாதாரமாக மாறுவதற்காக 20 லட்சம் கோடி அளவில், திட்டங்கள் இருப்பதாகவும், அதனை நிதியமைச்சர் அறிவிப்பார் எனவும் கூறினார்.

இதனையடுத்து, மே-13ம் தேதி தொடங்கி இன்று வரையிலும், தொடர்ந்து நான்கு நாட்களாக பல அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகின்றார். அவர் இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்று அவர் பேசுகையில் சுயசார்பு என்பது, இந்தியாவினைத் தனிமைப்படுத்திக் கொள்வது அல்ல எனவும், இந்தியாவிலேயே தயாரிப்போம் என்றக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஆறு விமான நிலைய நிர்வாகப் பணிகளை, தனியாரிடம் ஏலத்தில் விட உள்ளதாகத் தெரிவித்தார். நிலக்கரித்துறையின் கீழ் இருக்கும் 50 சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்தார்.

அதன்படி, இந்தத் துறையில் தனியார் துறையினர் இனி முதலீடு செய்ய இயலும். இதற்காக 50,000 கோடி ரூபாயினை அவர் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். இந்த பணத்தினைக் கொண்டு, நிலக்கரி துறையினை மேம்படுத்த இயலும் எனவும் அறிவித்துள்ளார்.

கனிம சுரங்களில் 500 சுரங்கங்கள், வெளிப்படையாக ஏலம் விடப்படும். இதன் மூலம், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இயலும். இராணுவ தளவாட உற்பத்தியில் 74% அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதாக அறிவித்தார். இதற்கு முன்னர், வெறும் 49% மட்டுமே அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்ப்பட்டு இருந்தது.

மேலும் இந்தியாவில் உள்ள, இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் அனைத்தும், நிறுவனங்களாக மாற்ற முடிவுகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவில் உள்ள எட்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள், தனியார் மயமாக்கப்படும். விண்வெளி துறையிலும், தனியார் துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

விண்வெளித் துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், இஸ்ரோவின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். அணு சக்தித் துறையிலும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட முடியும் என அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக பல அறிவிப்புகளை அறிவித்து வரும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன்களையும், தனியார் நிறுவனங்களுக்கும் அதிகளவில் திட்டங்களை அறிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS