நித்தியானந்தாவின் பணம் எங்கே இருப்பது பற்றியத் தகவல் கிடைத்துள்ளது!

26 January 2020 அரசியல்
nithyanandavideo.jpg

ஆள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் நித்தியானந்தா, எங்கு இருக்கின்றார் என்றத் தகவல் யாருக்கும் தெரியவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள குஜராத் மற்றும் கர்நாடகா போலீசார் தேடி வருகின்றனர். இந்தியா முழுவதும் தேடிப் பார்த்தப் பின்னும், அவர் கிடைக்காததால் சர்வதேசப் போலீசான இண்டர்போல் உதவியினை, அவர்கள் நாடியுள்ளனர்.

இந்நிலையில், நித்தியானந்தாவினை தேடும் நபராக அறிவித்து உத்தரவிட்டது நீதிமன்றம். குஜராத்தில் சட்டவிரோதமாக பள்ளியினை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த நித்தியானந்தாவின் மடம் கைப்பற்றப்பட்டு, அவர்களிடம் இருந்து அந்தப் பள்ளியானது மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நித்தியானந்தா எங்கு இருக்கின்றார், அவர் என்ன செய்கின்றார் என யாருக்கும் தெரியவில்லை. தன்னுடைய இரண்டு மகள்களை நித்தியானந்தா மறைத்து வைத்துள்ளார் என, குஜராத்தினை சேர்ந்த ஜனார்த்தன சர்மா வழக்குத் தொடர்ந்தார்.

இதனால், ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, நாங்கள் ஓடிப் போகவில்லை எனவும், எங்களை யாரும் கடத்தவில்லை எனவும், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் வீடியோவின் மூலம் வாக்குமூலம் அளித்தனர்.

நித்தியானந்தாவிடம் சீடராக இருந்த எங்கள் அப்பா, ஒரு இடத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டார். அவரை, நித்தியானந்தா தான், தன்னுடையப் பணத்தினைக் கொடுத்து, காப்பாற்றினார். ஆனால், அவருக்கு எதிராகவே தற்பொழுது எங்கள் தந்தை செயல்படுகின்றார். நாங்கள் அமெரிக்காவில் உள்ள டாலஸில் இருக்கின்றோம். இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அவர்கள் கூறினார்கள். இதனைப் பார்த்த நீதிபதி, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வந்து ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டார்.

இருப்பினும், அவர்கள் இன்று வரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து நித்தியானந்தாவின் சமூக வலைத்தள பக்கங்களில், தங்களுடைய வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு விஷயங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மிகவும் கூலாக எவ்விதப் பிரச்சனை இல்லாதவாறே, நித்தியானந்தா தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய வீடியோக்களில் தான், எவ்வாறு இவ்வளவு பெரிய ஆளாக மாறினேன் என்பது பற்றிய விளக்கத்தினையும் அவர் அளித்துள்ளார். மேலும், தான் சொந்தமாக ஒரு தீவினை வாங்கினை அதற்கு கைலாசா எனப் பெயர் வைத்துள்ளதாகவும், அந்த தீவில் இந்துக்கள் குடியேற அனுமதிக்கப்படுவர் எனவும் பேசினார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சையை வெளிப்படுத்தியது. மேலும், தன்னுடைய நாட்டிற்கு அங்கீகாரம் வழங்க, ஐநாவினை அனுகியும் உள்ளார் நித்தி. ஆனால், இன்னும் அவருடைய நாட்டிற்கு, உரிய அங்கீகாரம் அளிக்காமல் உள்ளது ஐநா.

இதனிடையே, நித்தியானந்தாவின் பணம் எங்கே இருக்கின்றது என்பது பற்றியத் தகவல் கசிந்துள்ளது. அவருடைய சீடர்களில் ஒருவருக்கு, பக்தர் ஒருவர் மெயில் மூலம் அனுகி, பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு, பூஜை செய்ய செலுத்த வேண்டியப் பணத்தினை மெயிலிற்கு அனுப்பியுள்ளார் நித்தியானந்தாவின் சீடர். அவர் அனுப்பிய மெயிலினை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், வனுவாட் என்ற நாட்டின் பெயர் உள்ளது. மேலும், வங்கிக் கணக்கிற்கு கைலாசா லிமிடெட் என்றப் பெயரும் உள்ளது.

வனுவாட் என்பது, ஆஸ்திரேலியா கண்டத்திற்கு அருகில் உள்ள மிகச் சிறியக் குட்டித் தீவு ஆகும். இது ஒரு நாடும் கூட. இந்த நாட்டில் வங்கிக் கணக்குத் தொடங்கினால், வரிகள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இங்கு கணக்கு தொடங்கும் நபர் பற்றிய தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தான், நித்தியானந்தா கிட்டத்தட்ட 3500 கோடி ரூபாய் அளவிற்கு, அந்த வங்கியில் சேமித்து வைத்து இருக்கின்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், நித்தியானந்தாவின் பணமானது, அங்கு தான் இருக்கின்றதா, இல்லை அங்கும் அவருக்குக் கணக்கு இருக்கின்றதா, என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, நித்தியானந்தா தொடர்ந்து கரீபியன் கடற்பகுதியில் தான் வசித்து வருகின்றார் என தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அவரைப் பிடிப்பதற்கு அனைத்து நாடுகளுக்கும் ப்ளூ நோட்டீஸ் அனுப்பியுள்ள இண்டர்போல், அவரை நெருங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நித்தியானந்தா இருக்கும் இடம் தெரிந்து விட்டால், அவரைக் கைது செய்ய ரெட் நோட்டீஸ் அனுப்ப தயாராக உள்ளது மத்திய அரசு. நித்தியானந்தா சிக்குவாரா அல்லது நினைத்தது போல கைலாசா நாட்டினை நிறுவி சாதிப்பாரா என, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

HOT NEWS