இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு கிடையாது! புதுச்சேரி பல்கலை அறிவிப்பு!

16 June 2020 அரசியல்
pondiuni.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்த ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை, புதுச்சேரிப் பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது.

வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கத் தடை தொடர்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய பொதுத்தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஒரு சில மாநிலங்களில் மட்டும் இறுதித் தேர்வுகள் முடிந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், கல்லூரிகளில் இன்னும் ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவில்லை. எப்பொழுது நடக்கும் என, மாணவர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கடைசி ஆண்டு பயிலும் மாணவர்கள், அடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில், இவ்வாறு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால், அவர்களின் எதிர்காலமும் தள்ளிக் கொண்டே செல்கின்றது. அரியர் தேர்வுகளும் நடைபெறாமல் உள்ளன.

எப்பொழுது இந்த கொரோனா வைரஸ் தொல்லை முடிவிற்கு வரும் என, மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகமானது, வருகின்ற ஜூலை மாதம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால், தொற்று ஏற்படும் அபாயம் உள்ளக் காரணத்தினால், இந்தத் தேர்வினை நடத்த வேண்டாம் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் கடைசி ஆண்டிற்கான இறுதி செமஸ்டர் தேர்வானது ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாணவர்களின் இண்டர்னெல் மதிப்பெண்ணைப் பொறுத்துத் தான், இந்த செமஸ்டர் தேர்விற்கு மதிப்பெண் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல், மற்றப் பல்கலைக்கழகங்களிலும் மதிப்பெண் வழங்கினால் நன்றாக இருக்கும் என, மாணவர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS