அசோக் செல்வன், வாணி போஜன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
படத்தின் கதை, மிகச் சிறப்பான மற்றும் சுவாரஸ்யமான ஒன்று. அசோக்கும், ரித்திகாவும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவருக்குள்ளும் அப்படியொரு நட்பு. இருவரும் வளர்ந்து பெரியாளாக மாறுகின்றனர். திடீரென்று, அசோக்கினைப் பார்த்து ஐ லவ் யூ எனக் கூறுகின்றார் ரித்திகா. அசோக்கும், ரித்திகாவினை திருமணம் செய்து கொள்கின்றார்.
ஆனால், தொடர்ந்து இருவரும் சண்டையிட்டு கொண்டே இருக்கின்றனர். இருவரும், விவாகரத்து செய்ய செல்லும் பொழுது, கடவுளான விஜய் சேதுபதி அசோக்கின் முன், காட்சியளிக்கின்றார். அப்பொழுது, அசோக்கிற்கு வரம் ஒன்றினை வழங்குகின்றார். அதில், ரித்திகாவிற்கும் அசோக்கிற்கும் திருமணம் நடைபெறாத ஒரு வாழ்க்கையைத் தருகின்றார். இந்த வாழ்க்கையைப் பற்றி, அசோக்கிற்கு மட்டுமே தெரியும்.
பின்னர் என்ன, ரித்திகாவின் காதலை உணரும் அசோக், அவரை திருமணம் செய்து கொண்டாரா, இல்லையா என, மிக சுவாரஸ்யமாக கூறியிருக்கின்றனர். படம் முழுக்க, செம ஜாலியாகவே செல்கின்றது. படத்தில் குறை என்றுக் கூறுவதற்கு ஒரு விஷயம் இருக்கின்றது என்றால், அது படத்தின் பாடல்கள் மட்டுமே.
லியோன் ஜேம்ஸ், இந்தப் படத்திற்கு இணையமைத்து இருக்கின்றார். படத்தின் பின்னணி இசை பரவாயில்லை என்றாலும், காதல் திரைப்படங்களின் வெற்றியே படத்தின் பாடல்கள் தானே. காதல் கதையை மையமாக வைத்து, தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளி வந்துள்ளன. அவைகள் வெற்றியடைய மிகப் பெரிய உதவியாக இருந்தது, படத்தின் பாடல்கள் தான். இந்தப் படத்தின் பாடல்கள், ஒருவேளை ஹிட்டாகி இருந்தால், இந்தப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படங்கள், ஹிட்டாகின்றதோ இல்லையே, சிறப்புத் தோற்றத்தில் வரும் படங்கள் ஹிட்டாகிவிடுகின்றன. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.
மொத்தத்தில் ஓ மை கடவுளே காதலே காப்பாற்றும்.