உலகின் மிகப் பெரிய மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலையினை, தமிழகத்தில் அமைக்க உள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பத்தாயிரம் பேருக்கு வேலை வழங்கக் கூடிய ஓலா மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும், மிகப் பெரியத் தொழிற்சாலையானது தமிழகத்தின் ஓசூர் பகுதியில் அமைய உள்ளது. இது குறித்து டெல்லியில் பேசிய அந்த நிறுவனத்தின் தலைவர் பாவேஷ் அகர்வால், உலகின் மிகப் பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையானது, தமிழகத்தின் ஓசூர் பகுதியில் அமைக்கத் திட்டமிட்டு உள்ளோம் எனவும், அங்கு 2354 கோடி ரூபாய் மதிப்பில், பெரிய ஆலையானது உருவாக்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.
அங்கு ஆண்டுக்கு 20 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடானது, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சுற்றுச்சூழல் மாசு மற்றும் இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களுக்கு மதிப்பு கூடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் காரணமாக, 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.