இன்னும் இரண்டு வாரங்களில் சர்வதேச விசாரணை! தப்பிக்குமா சீனா?

04 July 2020 அரசியல்
whochief.jpg

இன்னும் இரண்டு வாரங்களில், உலக சுகாதார மையத்தின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் எப்படிப் பரவ ஆரம்பித்தது என சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸானது உலகம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. இதனால், தற்பொழுது வரை ஒரு கோடியே பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த வைரஸ் காரணமாக, நான்கரை லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸானது, சீனாவில் உள்ள ஊஹான் பகுதியில் அமைந்திருக்கும் வைரஸ் ஆய்வுக் கூடத்தில் இருந்து தான் பரவி இருக்கின்றது என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

அமெரிக்கா மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டின. இதனை, சீன அரசாங்கம் முற்றிலுமாக மறுத்தது. இது தற்செயலாக பரவியிருக்கின்றது என்றுக் கூறியுள்ளது. இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொடர்ந்து சீனாவினைக் குற்றம்சாட்டி வருகின்றார். அவர் பேசுகையில், இந்த வைரஸானது, சீனாவினால் திட்டமிட்டேப் பரப்பப்பட்டு உள்ளது என்று பேசியுள்ளார்.

அமெரிக்காவின் சுகாதார பிரிவினரை சீனாவிற்குள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆனால், அதனை சீன அரசாங்கம் மறுத்தது. இந்த சூழ்நிலையில், உலக சுகாதார மையத்தில் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தின. அப்பொழுது அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், சீனாவிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்கு சீனா எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காத காரணத்தால், உலக சுகாதார மையத்தின் ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சீனாவில் பல விஷயங்கள் மறைக்கப்படுவதாக அந்நாட்டு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் அவ்வப்பொழுது குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் சீனாவிற்கு, உலக சுகாதார அமைப்பு சோதனைக்காக செல்ல உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

HOT NEWS