அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்றக் குழப்பம் நீடித்து வருகின்ற நிலையில், தொண்டர்களின் நலனே முக்கியம் என, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றியத் தகவலானது, வருகின்ற ஏழாம் தேதி அன்று வெளியாகும் என, கட்சியினர் கூறியுள்ளனர். இதனிடையே, எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையில், மோதல் இருப்பது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2 நாட்களாக, தன்னுடைய ஆதரவாளர்களை வீட்டிற்கு அழைத்து, ஓ பன்னீர் செல்வம் பேசி வருகின்றார். அதே போல், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றார்.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது ஓ பன்னீர் செல்வம் அதிரடியாக புதிய கருத்து ஒன்றினை, தன்னுடைய ட்விட்டர் கணக்கின் மூலம் வெளியிட்டு உள்ளார். அதில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! என தெரிவித்து உள்ளார்.