ஒத்த செருப்பு திரைவிமர்சனம்!

20 September 2019 சினிமா
os7.jpg

நடிகர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு. இத்திரைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இப்படத்திற்கு எப்பொழுதும் இல்லாத எதிர்ப்பார்ப்பினை, நடிகர் பார்த்திபன் ஏற்படுத்திவிட்டார். அதனாலயே, இப்படத்தினை காண்பதற்குப் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

படத்தில் ஒரு காவல்நிலையம், அதில் சில சேர்கள், மேலே ஒரு பேன். உள்ளே ஒரு நடிகர் தான், அவர் பார்த்திபன். அவ்வளவு தான். வேறு எதையும் அவர்கள் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. நல்ல கதை, நல்ல நடிப்பு இரண்டை மட்டுமே நம்பி, இப்படத்தினை உருவாக்கி உள்ளனர். இப்படத்தில், பார்த்திபன் என்ன சொல்ல வருகிறார் என்பதை, நீங்கள் திரையில் பார்த்தால் தான் தெரியும்.

படத்தில் வேறு கதாப்பாத்திரங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப் படவில்லை என்றாலும், அவர்களுக்கும் சேர்த்து, அவர்களுடன் இவர் பேசினால், எப்படி இருக்கும் எனவும் இவரே நடித்துக் காண்பித்து இருப்பார். ஒரு உதாரணம் சொல்லனும்னா, ஒரு கட்டத்தில் போலீஸ் இவர் தலையில் அடிப்பது போல் இருக்கும். ஆனால், அங்கு போலீஸ் கிடையாது. இவரே போலீஸ் அடித்தால், அடி வாங்குபவன் கீழே விழுவானோ அப்படி விழுந்து நடித்துக் காட்டி அசத்தியிருப்பார். இவர் உண்மையில் கொலை செய்தாரா? இவர் எதற்காக கொலைகள் செய்தார்? அதற்கான காரணம் என்ன? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரே ஆள், எப்படி இவ்வளவு விஷயங்களையும் செய்ய முடியும் என்பதை, யோசிக்காமல், செய்து முடித்திருக்கிறார் பார்த்திபன். இப்படத்திற்கு கண்டிப்பாக, பெரிய அளவில் செலவுகள் ஆகியிருக்காது. அதனால், இது சம்பாதிக்கும் அனைத்தும், பெரும்பாலும் லாபமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

படத்தின், ஒளிப்பதிவு என்பது தான் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். இயக்குநர் ஷங்கர் படத்தில், பெரிய அளவில் செட் போட்டுவிட்டு, நடிகரையும், நடிகையையும் மட்டுமே சுற்றி சுற்றி வந்து காட்டி, பிரம்மாண்டத்தை காட்டாமல் போய்விடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் இருப்பது சாராண ஒரு காவல்நிலையத்தின் அறை. அதில் எத்தனை கோணங்களில் காண்பித்தால், எப்படி காண்பித்தால் ரசிக்க முடியும் என்பதை தெளிவாக முன்கூட்டியே யோசித்து, ஒளிப்பதிவு செய்துள்ளார் ராம்ஜி.

பின்னணி இசை அமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். படத்திற்கு என்ன விதமான இசை வேண்டுமோ, அதனை சரியாக கொடுத்துள்ளார் எனலாம். மற்றொருவர் ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி. பார்திபன் அடி வாங்கினால், எவ்வித சப்தத்தை கொடுக்க வேண்டும். அவர் பெருமூச்சுவிட்டால், எவ்வித ஒலி தர வேண்டும் என படத்தின் ஒலி அமைப்பைச் செதுக்கியுள்ளார்.

இந்தப் படம், விருதுகளுக்காக உருவாக்கப்பட்ட படம் என்று கூறினால் அது மிகையாகாது.

ரேட்டிங் 3.7/5

HOT NEWS