ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சாதனை! அனுமதிக்காக காத்திருக்கும் இந்தியா!

21 July 2020 அரசியல்
vaccinecovid19.jpg

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்த கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தானது, தற்பொழுது வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனமும் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் முதலில் 1000 நபர்களிடம், இந்த மருந்தினைப் பரிசோதனை செய்தனர்.

அந்தப் பரிசோதனை முடிந்து தற்பொழுது 56 நாட்கள் ஆன நிலையில், அந்த மருந்தானது உடலில் அதிகளவில் எதிர்ப்பு சக்தியினையும், டி செல்களையும் உருவாக்கி உள்ளது. மேலும், இந்த மருந்தானது கொரோனாவையும் கட்டுப்படுத்தியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டப் பரிசோதனையும் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சோதனையில் இங்கிலாந்தினைச் சேர்ந்த, 18 முதல் 55 வயதிற்குட்பட்ட நபர்கள் சுமார் 1000 பேர், தன்னார்வலர்களாகப் பங்கேற்றனர். தற்பொழுது இந்த மருந்தானது, அமெரிக்காவில் கடைசிக் கட்டமாக 30,000 பேரிடம் சோதனை செய்யப்பட உள்ளது. அவர்களிடம் சோதனை முடிந்ததும், உலகம் முழுவதும் பெருமளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.

இது குறித்துப் பேசிய விஞ்ஞானிகள், தற்பொழுது வரை 200 கோடி டோஸ்கள் ஆர்டர் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சீரம் இன்ஸ்ட்டியூட் அமைப்பானது, ஆக்ஸ்போர்ட்டிடம் இந்த மருந்தினை இந்தியாவில் தயாரிப்பதற்கான லைசென்ஸைக் கேட்டுள்ளது. இது இன்னும் ஒரு வாரத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லைசென்ஸ் கிடைக்கும் பட்சத்தில், இந்தியாவில் 1000 பேரிடம் சோதனை செய்யப்படும். பின்னர், பயன்பாட்டிற்கு வரும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS