ப சிதம்பரத்திற்கு ஜாமீன்! உச்சநீதிமன்றம் அனுமதி!

05 December 2019 அரசியல்
pchidambarm.jpg

கடந்த 106 நாட்களாக, திஹார் சிறையில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான ப சிதம்பரம், நேற்று ஜாமீனில் வெளி வந்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பசிதம்பரத்தினை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்குள் சுவர் ஏறி குதித்து, கைது செய்தது, சிபிஐ. தொடர்ந்து, சிறையில் அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. இதனையடுத்து, ப சிதம்பரத்திற்கு, ஜாமீன் வழங்கியிருந்தது உச்சநீதிமன்றம். இருப்பினும், அவர் மீது, அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்ததால், அவர் திஹார் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை நீடித்தது.

அமலாக்கத்துறையின் விசாரணை நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்த நிலையில், நேற்று ப சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.

சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது. அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தால், கண்டிப்பாக செல்ல வேண்டும், தனி நீதிமன்றத்தின் அனுமதி இன்றி வெளிநாடு செல்லக் கூடாது, 2 லட்சம் பிணையத் தொகையாகவும், இரண்டு பேரின் கையொப்பத்துடன் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், வழக்கினைப் பற்றியும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் பற்றியும் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

நேற்று மாலையில், சிறையில் இருந்து வெளியில் வந்த அவரை, காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ப சிதம்பரம், இன்று (05-12-2019) நாடாளுமன்றத்தில் நிதிநிலைப் பற்றியும், பொருளாதாரம் பற்றியும் கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிவித்தார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் நான் உங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

HOT NEWS