4000 ரூபாய் தரவில்லை! நோயாளியை அடித்துக் கொன்ற மருத்துவ ஊழியர்கள்!

04 July 2020 அரசியல்
ambulancelive.jpg

உத்திரப் பிரதேச மாநிலத்தில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி 4000 ரூபாயினை தராத காரணத்தினால், அம்மருத்துவமனை ஊழியர்கள் அந்த நோயாளியினை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் குவார்சி பகுதியில் சுல்தான் கான் என்ற 44 வயதுடைய நபர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிரமான வயிற்று வலியின் காரணமாக, மருத்துவத்திற்காக சென்றுள்ளார். அப்பொழுது, அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும் என்றுக் கூறியிருக்கின்றார் மருத்துவர். ஆனால், அதற்கு 4,000 ரூபாய் செலவாகும் எனவும் கூறியிருக்கின்றார். தன்னிடம், அவ்வளவுப் பணம் இல்லாத காரணத்தால், அவர் வெறும் மாத்திரைகளை மட்டும் வாங்கியிருக்கின்றார்.

ஆனால், அங்கிருந்து மருத்துவ ஊழியர்கள் அவரை வெளியே விடவில்லை. அவருக்காக 4,000 ரூபாய் பில் போட்டு விட்டதாகவும் எனவே, பணத்தினைக் கட்டினால் தான் வெளியில் விடுவோம் என்றுக் கூறி மிரட்டியுள்ளனர். அப்பொழுது, அவருடைய வீட்டார் வந்து, அவரை மீட்டு செல்ல முயன்றனர். இந்த சூழ்நிலையில், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அவருடையத் தலையில், தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனால், சுருண்டு விழுந்த சுல்தான்கான், துடிதுடித்து அங்கேயே இறந்து போனார். இச்சம்பவம், உபியில் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனக் குரலை எழுப்பி உள்ளனர். இந்த சூழ்நிலையில், அந்த மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளில் இச்சம்பவம் பதிவானதைத் தொடர்ந்து அதனைக் கைப்பற்றிய போலீசார், அச்சம்பவத்திற்குக் காரணமான ஊழியர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS